வரிப்பணம் மாநகர சபைக்கு சென்றடைந்ததா? மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளர் அப்துல் மனாப் கேள்வி!

கல்முனை மாநகர சபை நிதிப்பிரிவில், மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு, நிதிப்பிரிவில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். இன்னும் பல மக்களின் வரிப்பணமும் மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, மக்கள் கலமுனை மாநகர நிதிப்பிரிவில் தமது விசாரணைகளை மேற்கொள்வது பொருத்தமானதாக அமையும் என, கல்முனை மாநகர சபை ஊழல்களுக்கு எதிராக குரலெழுப்பி வந்த, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளருமான எம்.ஐ.எம்.அப்துல் மனாப் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (2) கல்முனையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் இருந்த அதிகாரிகள், தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், சபையை ஆளும் கட்சியின் தலைவர் போன்றோரின் அனுசரணையுடன் ஊழலுக்கு துணை போனவர்களாக இருந்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு, கல்முனை மாநகரில் 100 மீற்றர் வீதிக்கு 75 வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டதாக தெரிவித்து இடம்பெற்ற ஊழல் அடங்கலாக திரும்பும் திசைகளிலெல்லாம் ஊழல் நிறைந்தே காணப்படுகின்றது. கல்முனை ஆணையாளர், இவ்வாறான மோசடிக்காரர்களை அடையாளம் கண்டு, பணி இடைநிறுத்தம் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டும்.

பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் செலுத்தப்படும் மக்களின் வரிப்பணம் கொள்ளையர்களினதும் திருடர்களினதும் வயிற்றுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு, கல்முனை மாநகர நிதிப் பிரிவுக்கு, தமது வரி கொடுப்பனவுகள் சென்றடைந்துள்ளதா என்பது பற்றிய விசாரணைகளை மேற்கொள்வது பொருத்தமானதாக அமையும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.