வட மாகாணத்தின் கல்வியை முன்கொண்டு செல்வதற்கு ஒரு தீர்க்கதரிசனம் இருக்க வேண்டும் – சட்டத்தரணி செல்வஸ்கந்தன்

ட மாகாணத்தின் கல்வியை முன்கொண்டு செல்வதற்கு ஒரு தீர்க்கதரிசனம் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் எங்கள் எதிர்கால சந்ததியை வட மாகாணத்தின் செல்வங்களாக உருவாக்க முடியும் என சட்டத்தரணி செல்வஸ்கந்தன் தெரிவித்தார்.

சட்டத்தரணியின் மறைந்த தாய் மற்றும் மனைவியான முறையே திருமதி. எஸ்.இராஜரட்ணம், திருமதி. பத்மபாஷினி செல்வஸ்கந்தன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக சட்டத்தரணி இ.செல்வஸ்கந்தனின் அனுசரணையுடன் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியினால் கடந்த 2022ஆம் ஆண்டு வட மாகாண ரீதியில் நடத்தப்பட்ட ‘மகாஜனன்’ புதிர்ப் போட்டிக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

மகாஜன கல்லூரியின் பாவலர் துரையப்பாபிள்ளை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்வினை கல்லூரியின் அதிபர் மணிசேகரன் தலைமையேற்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வடக்கு மாகாண கல்வியில் ஒரு தீர்க்க தரிசனம் இருக்கவேண்டும். வடக்கு மாகாணத்தில் கல்வி தொடர்பில் தீர்க்க தரிசனம் இல்லை என்பது கவலையான விடயமாக உள்ளது.

கல்வியில் நாம் எவ்வாறு வட மாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்றொரு தீர்க்க தரிசனம் எல்லோர் மத்தியிலும் உருவாகும்போதுதான் எங்கள் எதிர்கால சந்ததியை வட மாகாணத்தின் செல்வங்களாக உருவாக்க முடியும்.

வடக்கு மாகாணம் கல்வித்துறையில் மீண்டும் சிறந்த மாகாணமாக மாறவேண்டும். இதற்கு எல்லோரும் கல்விக்காக அர்ப்பணிக்க வேண்டும்.

1970 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தந்த பிரதம மந்திரி வட மாகாணத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பேன் என்றார். ஆனால் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் சென்ற வட மாகாணமாக மாணவர்களின் எண்ணிக்கை 45 வீதமாக இருந்தது.

அந்த நிலைமை மீண்டும் வரவேண்டும். அதற்காகத்தான் அதன் அத்திவாரமாக இந்த பரீட்சையை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

இத்தகைய பரீட்சையில் வட மாகாணத்தின் அனைத்து மாணவர்களும் பங்குபற்றுகின்ற வகையில் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்த வேண்டும் என வலிகாமம் பிரதி கல்விப் பணிப்பாளர் ஆதவன் தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் ஒத்துழைப்பு வழங்குகின்றேன்.

நான் மட்டுமன்றி, வட மாகாணத்தில் திறன்பட கல்வியில் உயர்ந்து வெளிநாடுகளில் திறம்பட உழைத்து வாழ்பவர்கள் பலர். அவர்கள் தமது சொத்துக்களின் ஒரு பகுதியை கல்வியின் வளர்ச்சிக்காக வட மாகாணத்துக்கு வழங்கவேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றேன்.

தனிப்பட்ட ரீதியில் உதவி செய்யாமல் எல்லோரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்றபோது அதன் பூரணமான ஒத்துழைப்பு கிடைத்து, வட மாகாணத்தின் கல்வியை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களது பிள்ளைகளை, மாணவர்களை விஞ்ஞானம் மற்றும் கணிதத்துறையில் ஊக்குவியுங்கள்.

மாணவனின் திறமையை அறிந்து வழிநடத்தக்கூடியவர்கள் பெற்றோர்களை விட ஆசிரியர்களே. மாணவர்களுக்கு பாசத்தையும் கல்வியையும் சேர்த்து அவர்களே ஊட்டுகின்றார்கள். இதன் மூலம் தான் மாணவர்கள் கல்வியில் முன்னேற முடியும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.