தமிழர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர்

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியில் பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிராம மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினர் மணல் அகழ்வை நிறுத்துவதற்காக கடந்த சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினராலும், குறித்த மணல் அகழ்வை மேற்கொள்ளும் நபராலும் அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளால் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இலுப்பை கடவை பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதும் சம்பந்தப்பட்ட நபர் மீதோ சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீதோ எந்த சட்ட நடவடிக்கையோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கையகப்பட்டுத்த கூட பொலிஸார் முன்வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

உரிய அனுமதி இன்றி காடுகள் பல மாதங்களாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அரச காணியில் மணல் அகழ்வும் இடம்பெற்றுள்ள நிலையில் இலுப்பை கடவை பொலிஸாரோ வனவள திணைக்களமோ எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு சென்ற அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பை கூட வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.