மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் – டி.வி.சானக
மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.
மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்க மின்சாரத்துறை அமைச்சு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்வதற்காவே மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின்சாரசபையின் நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுவது அடிப்படையற்றது.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையை மறுசீரமைக்க நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழு அறிக்கை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு அறிக்கையை எதிர்வரும் மாதம் முதல் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனை தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு 14 ஆயிரமாக காணப்பட்ட மின்சார சபை சேவையாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 22400 ஆக அதிகரித்துள்ளது.
மறுசீரமைப்பு அறிக்கையில் ஊழியர் குறைப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்தி,விநியோகம்,மற்றும் இதர சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை ஒருமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் செலவுகளை மட்டுப்படுத்தும் போது ஒரு முன்னேற்றகரமான தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை