இலங்கை -இந்திய மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சரின் செயற்பாடு – சாணக்கியன் இராசமாணிக்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுகிறார்கள். யாழ் மாவட்ட மக்கள் இவ்வாறானவர்களை இனிவரும் காலங்களில் தெரிவு செய்யக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ( 7) இடம்பெற்ற மோட்டார வாகனச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் கட்டளைகள் மீதான விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில்

நாட்டின் பொருளாதார நிலைமை, பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் உரையாற்றினார்.

2500 ரூபாவினால் ஒரு குடும்பம் தமது ஒருமாத செலவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார், ஆகவே இவரின் பொருளாதார மதிப்பீட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம்,நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது எனஆளும் தரப்பினர் பாராளுமன்றத்தில் பெருமையாக குறிப்பிட்டாலும் நடைமுறையில் நிலைமை தலைகீழாக உள்ளது.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு முன்னர் தேவையான மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்படுகிறது.

தமது பிள்ளைகளின் மருத்துவ மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு தாய் தனது இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் நாட்டில் பதிவாகியுள்ளது, ஆகவே பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிடும் அரசாங்கம் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 158 பில்லியன் ரூபாவை தேசிய மட்டத்தில் கடனாக பெற்றுக்கொண்டுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தின் வரி அதிகரிப்பு கொள்கை ஊடாக கடனை மீள் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கையினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.எரிபொருள் விலையேற்றத்தினால் 4 இலட்சம் முச்சக்கர வண்டி சாரதிகள் வாழ்வாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய பிற்போடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு அரசாங்கம் தடையேற்படுத்தியுள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பதை தடுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய திறைச்சேரியின் செயலாளர் செயற்பட வேண்டும்,இல்லாவிடின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு அமைய சிறை செல்ல நேரிடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிச்சையாக முன்னேற்றமடையும் திறன் கொண்டவர்கள். அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி கைத்தொழில் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார், ஆனால் வடக்கு மாகாண விவசாயிகளிடமிருந்து 40 முதல் 60 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநரின் முறையற்ற செயற்பாடுகளினால் கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் தமிழர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரை பகுதியில் மாடுகள் வெட்டியும், சுட்டும் கொல்லப்படுகின்றன. இவற்றை பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீன்பிடி கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா செயற்பட்டு அரசாங்கத்தின் கைகூலியாக உள்ளார்.

இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைக்கு இந்தியா குரல் கொடுப்பதால் மீனவர் பிரச்சினை ஊடாக இரு நாட்டு தமிழர்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது, அதற்கு சார்பாக கடற்றொழில் அமைச்சர் செயற்படுகிறார். இவ்வாறானவர்களை யாழ்ப்பாண மக்கள் இனியாவது தெரிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.