இரு தரப்பு கடன் வழங்குனர்களிடமிருந்து இம்மாதத்திற்குள் 5 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினரிடமிருந்தும் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளமையின் பிரதிபலனாக, இம்மாதத்திற்குள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய இரு தரப்பு கடன் வழங்குனர்களிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக கடந்த ஓராண்டு காலமாக சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பல பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அதற்கமைய இலங்கையின் கடன் மீள செலுத்தல் நடவடிக்கைகளுக்காக பிரான்ஸின் லசார்ட் நிறுவனம் மற்றும் கிளிபர்ட் ஹான்ஸ் ஆகிய நிறுவனங்களின் சேவைகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பிரதிபலனாக இந்தியா , பரிஸ் கிளப் நாடுகள் மற்றும் சற்று கால தாமதாக சீனாவும் கடன் மறுசீரமைப்பிற்கான தமது நிதி உத்தரவாதங்களை வழங்கின. அதற்கமைய கடந்த ஆண்டு செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டினை, பணிப்பாளர் சபை கலந்துரையாடலுக்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது.

துரதிஷ்டவசமாக இந்த வெற்றியை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாமல் போயிருந்தால், நாடு பாரதூரமான வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கும். எவ்வாறிருப்பினும் தற்போது அந்த அபாயத்தைக் கடந்துள்ளோம். ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகிறது. அந்நிய செலாவணி இருப்பும் அதிகரித்து வருகிறது. இதன் நன்மை அனைத்து மக்களையும் சென்றடைகிறது. சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளன.

இந்நிலையில் இம்மாதத்திற்குள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய இரு தரப்பு கடன் வழங்குனர்களிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்தார் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.