வங்குரோத்து நிலைக்கு பொதுஜன பெரமுன பொறுப்புக்கூற வேண்டும் -கபீர் ஹசீம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெட்கம் மற்றும் பயம் இல்லாமல் கருத்துரைக்கிறார். நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு பொதுஜன பெரமுன பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டதால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். எரிபொருளின் விலை, மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வரி வீதமும், வட்டி வீதமும் பன்மடங்கு அதிகிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்த அனைத்து தீர்மானங்களுக்கும் நாட்டு மக்கள் பலியாகியாகியுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களை பணயமாகக் கொண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசாங்கத்துக்கு முன்வைத்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதா? இல்லை, அரசாங்கம் ஆரம்பத்தில் செயற்பட்டதைப் போன்று தற்போதும் செயற்படுகிறது. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையும், அமைச்சர்களுக்கான வரபிரசாதங்களும் குறைக்கப்படவில்லை.
அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ள நிலையில் ஊழல் மோசடிக்கு எதிரான சட்டமூலத்தை அரசாங்கம் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. மாறாக அரசாங்கம் வழமை போன்று முறையற்ற வகையில் செயற்படுகிறது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு குழுக்களுக்கு எதிர்க்கட்சிகள் நியமிக்கப்பட வேண்டும் என 2015 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு யோசனையை நாடாளுமன்றத்துக்கு முன்வைத்து அதனை நிறைவேற்றினார்.ஆனால் அவர் தற்போது அந்த முறைமையை முழுமையாக மீறி ஆளும் தரப்புக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு குழுக்களான கோப் ,கோபா மற்றும் அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுக்களின் தலைவர் பதவிகள் ஆளும் தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளன, இவ்வாறான நிலையில் எவ்வாறு தவறுகள் சுட்டிக்காட்டப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்ள கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை வெற்றிகொண்டு விட்டோம் எனப் பெருமை கொள்ள முடியாது, ஏனெனில் அரசாங்கம் தனது முறைமை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாத காரணத்தால் உலகில் பெரும்பாலான நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொண்டதன் பின்னரும் வங்குரோத்து நிலை அடைந்துள்ளன. இலங்கையும் அவ்வாறான நிலை நோக்கிச் செல்கிறதா?
பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுனவால் மாத்திரம் தீர்வு காண முடியும், நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் வெட்கமில்லாமல் கருத்துரைக்கிறார். நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதற்கு பொதுஜன பெரமுனவும், அதன் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை