மக்கள் ஆயுதங்களை கையிலெடுப்பர் – கம்மன்பில அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் ஜனநாயக ரீதியில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த மக்களுக்கு இடமளிக்காவிட்டால் வாக்குச்சீட்டுக்கு பதிலாக மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுப்பார்கள் என்பதை ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நிதி விடுவிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, திறைசேரியின் செயலாளருக்கும் இடையில் இடம்பெறவிருந்த பேச்சுகளுக்கு ஜனாதிபதியே தடையேற்படுத்தியுள்ளார்.

நிதி விடுவிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியின் செயலாளரை ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு சபையைக் கூட்டி அதற்கு திறைசேரியின் செயலாளரை அழைத்துள்ளார்.ஜனாதிபதியின் செயற்பாடுகள் முறையற்றனவாக உள்ளன.

தேர்தலை பிற்போடுவது தமக்கு சாதகமாக அமையும் என அரசாங்கம் கருதுமாயின் அது அரசாங்கத்துக்கே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, 1975 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை 2 ஆண்டுக்கு பிற்போட்டார், இதனை தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீP லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்தது, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் 8 ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றியது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, நாடாளுமன்ற பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக பொதுத்தேர்தலை பிற்போட்டதால் வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்டமும், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டமும் தோற்றம் பெற்று நாட்டில் இரத்த வெள்ளம் ஓடியது.

நல்லாட்சி அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றிப்பெறும் என்பதை நன்கு அறிந்து திட்டமிட்ட வகையில் மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது, பெறுபேறு 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்து ஒரு தேசிய பட்டியல் ஆசனம் மாத்திரம் அந்தக் கட்சிக்கு மிகுதியானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது மாமனாரான ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கையைப் பின்பற்றுகிறார். ஜே.ஆர். ஜயவர்தனவின் இறுதி அரசியல் காலம் எவ்வாறு அமைந்தது என்பதை அவர் மீட்டு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். ஜனநாயக ரீதியில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த மக்களுக்கு இடமளிக்காவிட்டால் வாக்குச் சீட்டுக்குப் பதிலாக மக்கள் ஆயுதத்தை கையில் எடுப்பார்கள். அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.