நாட்டை கலவர பூமியாக்கி விடாதீர்கள் – சம்பிக ரணவக்க அரசாங்கத்திடம் கோரிக்கை
ஜனநாயக போராட்டங்களை வன்முறைகள் ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. அது 1971 ஆம் ஆண்டுகள் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட கலவரம் போன்ற சூழலை ஏற்படுத்தி விடும். அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்பட இடமளித்து விட வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
காலாவதியான கண்ணீர்ப்புகை பிரயோகம் பிரயோகிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று, பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதி இன்றி பல்கலைக்கழகத்திற்குள் நுழைத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இராணுவத்தினரைக் கொண்டு முடக்குமளவிற்கு அங்கு எவ்வித வன்முறைகளும் இடம்பெறவில்லை.
கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான வன்முறைகளால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டு விட இடமளித்து விட வேண்டாம் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றேன். மாணவர்கள் வன்முறையை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கும் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர்களுக்கும் உண்டு.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டாலும் , அதன் நிபந்தனைகளை பலவந்தமாக செயற்படுத்த முடியாது. மக்களின் அனுமதியுடனேயே மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். அதே போன்று அடிப்படைவாதத்துக்கும் இடமளித்து விடக் கூடாது. அடிப்படைவாதம் மறுசீரமைப்புக்களுக்கு பெரும் தடையை ஏற்படுத்தும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை