தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு களபாவோடை அம்மன் மருத்துவ உதவி!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் சோயாளர்களின் நலன்கருதி ஏழாலை களபாவோடை அம்மனால் 5 லட்சம் ரூபா பெறுமதியாள அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதாரத் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சாதாரண தர மக்கள், தனியார் மருத்துவ சேவைகளைப் பெறமுடியாத நிலைமையில் தமது பொருளாதார நெருக்கடியால் அரச வைத்தியசாலைகளையே நாடுகின்ற நிலைமை நாட்டின் சகல மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. அரச வைத்தியசாலைகளில் நோயாளர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனால் அரச வைத்தியசாலைகள் போதிய மருந்துகள் இன்மையால் பெரிதும் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை முதற்கொண்டு மாகாணங்களுக்குக் கீழ் உள்ள வைத்தியசாலைகள் வரை அனைத்து அரச சுகாதார சேவைகளும் நோயாளர்களுக்கு திருப்தியான சேவையை வழங்கமுடியாத நிலைமை அண்மைக்காலமாக நாட்டில் காணப்படுகின்றது.
இதனால், சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புகள், புலம்பெயர் தனிநபர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் உதவிகளால் அரச சுகாதாரசேவைகள் இன்றும் முடங்காத நிலைமையில் உள்ளன.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்து மத நிறுவனமாகிய ஏழாலை களபாவோடை அம்மனின் முயற்சியால் 5 லட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் வழங்கப்பட்டன.
ஏழாலை களபாவோடை அம்மன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று கிளினிக் அமைக்கப்பட்டபோது அதனை அமைப்பதற்கும், குழந்தைகள் விடுதி புனரமைப்பு என்று பல்வேறு வகைகளிலும் நோயாளர்கள் சுத்தமான குடிதண்ணீரைப் பெறுவதற்கு குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதிகளை விடுதிகளுக்குப் பொருத்துதல் என பல வகைகளில் உதவிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை