அழுத்தம் கொடுத்தால் ஜனாதிபதிக்கு எதிராக சிறப்புரிமை பிரச்சினையை கொண்டுவருவோம் – நளின் பண்டார
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அதன் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியும். அதனால் அவர் ஒருபோதும் இந்தத் தேர்தலை நடத்த மாட்டார்.
தேர்தல் இடம்பெறுவதை நிறுத்துவதற்கு அரசமைப்புக்கு விரோதமான எந்த நடவடிக்கைக்கு செல்வதற்கும் அவர் பின்வாங்கப்போபவர் அல்லர்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் அவருக்கு எதிராக சிறப்புரிமை பிரச்சினையை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது 300 கோடி ரூபாவும் செலவாகுவதில்லை. கடந்த காலங்களிலும் தேர்தலுக்கான செலுத்துகைகள் தாமதித்தே வழங்கப்ப்பட்டன. ஆனால் தங்களுக்கு வாக்கு இல்லை என்பதை அரசு நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. தேர்தல் இடம்பெற்றால் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பது இவர்களுக்குத் தெரியும்.
ரணில் விக்ரமசிங்க எப்போதும் தேர்தல் ஒன்றுக்கு முன்னர், அதன் பெறுபேறு தொடர்பில் ஆய்வு செய்வார்.அது அவரின் வழமை. 2010 இல் அவருக்கு வெற்றிபெற முடியாது என்பதை ஆய்வு செய்து பார்த்ததாலே தேர்தலில் போட்டியிடாமல் பீல்மார்ஷல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்தினார். 2015 இலும் அவர் தோல்வியடைவார் என்று தெரிந்ததாலே மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக்கினார். இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராகப் பெயரிடவும் அவர் தயாராக இருந்தார்.
அதனால் தற்போது தேர்தல் இடம்பெற்றால், ஐக்கிய மக்கள் சக்தி பாரியதொரு வெற்றியை பெறும் என்பதை ரணில் விக்ரமசிங்க நன்கு அறிவார். ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறுவதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். அதேபோன்று அவரின் ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சியடைவதையும் அவர் விரும்பமாட்டார். அவரைப் பாதுகாத்து வரும் பொதுஜன பெரமுனவை பாதுகாக்கவும் அவரின் ஜனாதிபதி பதவியைப் பாதுகாக்கவும் அவர் எதனை வேண்டுமானாலும் செய்வார்.
அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ரணில் விக்ரமசிங்க நடத்தவே மாட்டார். தேர்தலைத் தடுப்பதற்கு எந்தவொரு சதித்திட்டத்தையும் மேற்கொள்வார். அதற்காக அரசமைப்புக்கு விரோதமாக எந்த நடவடிக்கையையும் முன்னெடுப்பதற்கு அவர் பின்வாங்கப்போவதில்லை. அவரின் இந்த நடவடிக்கைக்கு பொதுஜன பெரமுன பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.
அத்துடன் ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும்போது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் வாய் மூடி உட்காருங்கள் எனத் தெரிவித்து வருகிறார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை, நிறைவேற்று அதிகாரியால் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்துவதாகவே இருக்கிறது. அதனால் சபையில் எமது சிறப்புரிமை மீறப்படுவதாகத் தெரிவித்து ஜனாதிபதிக்கு எதிராக சிறப்புரிமை பிரச்சினை முன்வைக்க நேரிடும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை