முடிந்தால் நீதிபதிகளை அழைத்துப் பாருங்கள் மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் – அனுரகுமார சவால்
உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது, நாடாளுமன்றத்தை உயர்நீதிமன்றம் பலப்படுத்தியுள்ளது, முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து பாருங்கள், அடுத்து நிகழ்வதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆளும் தரப்பினரிடம் சவால் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
நாட்டு மக்களின் தேர்தல் உரிமை, மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார செயற்பாடுகள் தொடர்பில் ஆளும் தரப்பினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள், அவர்களின் கருத்துக்கு பதிலளிக்கப் போவதில்லை, ஏனெனில் அவர்களுக்கு நாடாளுமன்றத்துக்குள் மாத்திரம் தான் கருத்துக்களைக் குறிப்பிட முடியும், மக்கள் மத்தியில் சென்று கருத்துரைக்க முடியாது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தற்போது பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள், நாட்டு மக்கள் தேர்தலைக் கோரவில்லை எனக் குறிப்பிடுகிறார்கள்.
தேர்தல் நாட்டு மக்களின் விருப்பத்துக்கு அல்ல, அரசமைப்புக்கு அமைய நடத்த வேண்டும். தேர்தலை மக்கள் கோரவில்லை என ஆளும் தரப்பினரால் மக்கள் மத்தியில் சென்று குறிப்பிட முடியுமா?
நாட்டு மக்கள் தேர்தலைக் கேட்கவில்லை என்றால், மக்கள் தேர்தல் கேட்கும் அனைத்து தருணத்திலும் தேர்தலை நடத்த வேண்டும், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால் தான் அரசமைப்பிற்கு அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,
தேர்தலை நடத்த நிதி இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது, நிதி இல்லை என்று உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட இடமளித்தால், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் கூட இடம்பெறாது, ஜனாதிபதி தேர்தலை நடத்த நிதி இல்லை.
ஆகவே, நான் ஜனாதிபதியாக இருக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவார், ஆளும் தரப்பினரும் அதனை ஏற்றுக்கொள்வார்கள், இதற்கு எவ்வாறு இடமளிப்பது?
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்கெடுப்பை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு 140 கோடி ரூபாவை திறைசேரியிடம் கோரியுள்ளது. அரசாங்கத்திடம் நிதி இல்லை என்பது உண்மையல்ல, அரசாங்கத்துக்கு மக்கள் வாக்கு இல்லை அதனால் அரசாங்கம் தேர்தலுக்கு பயம் என்பதே உண்மை.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, ஆகவே உறுப்பினர் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது, தற்போதைய நிலையில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது.
ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் வரபிரசாதங்களை குறைக்கலாம், ஆகவே உண்மை நோக்கம் காணப்படுமாயின் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு ஒரு பிரேரணையை கொண்டு வரலாம், அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆரவாரமாக செயற்படும் அரசாங்கம், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிடுகிறார்கள்.
நிதி விடுவிப்பு விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடையுத்தரவால் தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் உறுப்பினர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணை முற்றிலும் தவறானது.
உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவால் நாடாளுமன்றத்தில் பலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட நிதியை நிறைவேற்றுத்துறை கட்டுப்படுத்தியதை நீதிமன்றம் தடுத்துள்ளது,ஆகவே, நாடாளுமன்றத்தின் விவகாரத்துக்கு நீதிமன்றம் தடையேற்படுத்தவில்லை.
முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்துக்கு அழையுங்கள், அடுத்து நிகழ்வதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்றத்தைக் கடுமையாக விமர்சிக்கும் நாட்டு மக்கள் நீதிமன்ற கட்டமைப்பில் மீதும், சுயாதீனத்தன்மை மீதும் பாரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள். அரசியல் அதிகாரம் நீதிமன்றத்துக்கு பிரயோகிக்கப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும்.
வடக்கு மக்கள் கொழும்பில் சிங்கள அரசாங்கம் உள்ளது என்று குறிப்பிடுகிறார்கள், தற்போது மாகாண சபைகள் இல்லை, மக்கள் பிரதிநிதிகளும் இல்லை, உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் பிற்போடப்பட்டால் வடக்கு மக்கள் சிங்கள அரசாங்கம் என்று குறிப்பிடுவது சரியானதாக அமையும், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிர்வாகக் கட்டமைப்பு தோற்றம் பெற்றால் வடக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இல்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு, நாட்டு மக்கள் தேர்தல் உரிமையைக் கோரி வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடும் போது ஜனாதிபதி மிலேட்சத்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விடுகிறார்,
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் மீது ஈடுபட்ட இராணுவத்தினர் காடையர்களை போல் செயற்பட்டார்கள், வித்தியாசமான முறையில் ஆடையில் இருந்தவர்கள் படையினரா என்பதை தாம் அறியவில்லை என இராணுவ ஊடக பேச்சாளர் குறிப்பிடுகிறார்,
வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும், வன்முறையான முறையில் செயற்பட்டால் பாரிய விளைவுகளை ஜனாதிபதி எதிர்கொள்ள நேரிடும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை