பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் 1000 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? – செல்வம் சபையில் கேள்வி
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள 1000 பேருக்கு மாத்திரம் புலமை பரிசில்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாமல் இவ்வாறு புலமைபரிசில்கள் வழங்கப்படுகின்றமை தவறான நிலைமையைத் தோற்றுவிக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு அல்ல என ஜனாதிபதியும்,அரசாங்கமும் குறிப்பிடுகின்ற நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயித்துள்ளது.
தேர்தல் விவகாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கும்,அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இழுபறியால் நாட்டு மக்களும், வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் நடக்குமா, அல்லது பிற்போடப்படுமா என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்,அதனை விடுத்து .இரு தரப்பினரும் முரண்பட்டுக் கொண்டிருந்தால் தேர்தல் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைவடையும்.
மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம், சர்வதேசமும் இதனையே வலியுறுத்துகிறது. 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்படும் என அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்குகிறது,ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது முழுமையான தீர்வாக அமையாது,அதிகாரப் பகிர்வு என்பது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓர் ஆரம்பப் புள்ளியாகக் கருதப்படும். மத்திய அரசாங்கத்திடம் உள்ள பாடசாலை மற்றும் வைத்தியசாலை உட்பட நிறுவன மட்ட அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கப்பட வேண்டும்.
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த ஒரு சில தீர்மானங்களால் நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சிறந்த விடயங்களை முழுமையாக வரவேற்போம். நாட்டில் மருந்து உட்பட பல பிரச்சிகைள் காணப்படுகின்றன. ஆகவே அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும்.
அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக நிர்ணயிப்பதாகக் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண விவசாயிகள் செல்வந்தர்கள் அல்லர். காணி, நகை ஆகியவற்றை அடகு வைத்து, கடனாளியாக விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். ஆகவே நெல்லுக்கான உத்தரவாத விலையை 120 ரூபா அல்லது 130 ரூபா என நிர்ணயிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.
நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் ஊழல் மோசடி நிறுத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் காணி பதிவு விவகாரத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுகின்றன. யுத்தகாலத்தில் அரச அதிகாரிகள் முறையாக செயற்பட்டார்கள், ஆனால் தற்போது ஒருசில அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்படுகின்றமையால் ஒட்டுமொத்த அரச அதிகாரிகள் மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, காணி உறுதிப்பத்திரம் பதிவு மோசடியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தொடர்பான விவரங்களை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவோம்.
வவுனியாவில் தந்தை, தாய் உட்பட இரு பிள்ளைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள். இவர்களின் மரணம் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆகவே, இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக் கொள்கிறோம்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் புலமை பரிசில் வழங்கல் திட்டங்களை முன்னெடுக்கின்றன. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் 1000 பேருக்கு மாத்திரம் புலமை பரிசில் வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கத்துடன் ஒன்றினையாமல் முன்னெடுத்துள்ளதன் நோக்கம் என்ன?
நாட்டில் மூவின மக்கள் வாழ்கிறார்கள்,கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரதேசத்தில் மாத்திரம் புலமைப்பரிசில் வழங்குவது தவறான நிலையைத் தோற்றுவிக்கும். ஆகவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை