உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான சூழலை தோற்றுவிக்கும் – எம்.உதயகுமார்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான ஆரம்ப சூழலை தோற்றுவிக்கும். அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தினால் சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கிடல் தொடர்பில் உயர்நீதிமன்றம் ஒரு சிறந்த தீர்ப்பை அறிவித்துள்ளதுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒரு திகதியை உத்தியோகபூர்வமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது, தேர்தல் தொடர்பில் முன்னேற்றகரமான ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ள நிலையில் தேர்தலை பிற்போட ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் தேர்தல் தொடர்பில் சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது எனக் குறிப்பிடும் அரசாங்கம், தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாரிய தடைகளை ஏற்படுத்துகின்றது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்றால் அது ஆட்சி மாற்றத்துக்கான சூழலை தோற்றுவிக்கும் ,தேர்தலில் படுதோல்வி அடைய நேரிடும் என்பதை அரசாங்கம் நன்கு அறியும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு சர்வதேசம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தினால் அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அரசாங்கத்திடம் அழுத்தமாகக் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானங்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதை ஆராய வேண்டும் என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டுமாயின் ஜனநாயக ரீதியில் நாட்டு மக்கள் எடுக்கும் தீர்மானங்கள் சிறந்தனவாக அமையும். நாட்டு மக்களின் ஜனநாயக வாக்குரிமையைப் பாதுகாக்க சட்டத்தின் ஊடாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.