இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –
சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வைப்பதற்கான பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சால் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய நியமனம் இலங்கையின் பொருளாதார மீட்பின் ஒரு மிகப் பெரும் பங்காக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் உலக நாடுகளிலுள்ள இலங்கை புலம்பெயர்ந்தோரை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாடுகளிலுள்ளவர்களின் முதலீடுகள் மிக முக்கியமானவை. இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியால் சர்வதேச முதலீட்டார்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்குத் தயக்கம் காட்டினர்.
தற்போது ஜனாதிபதியின், பொருளாதார மீட்புக்கான திட்டங்களால் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கிப் பயணிக்கின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக நாடுகளிலுள்ள சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களை இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவே எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து சர்வதேச முதலீட்டாளர்களையும் இணைத்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சியை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன்.
சர்வதேச முதலீட்டார்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் இலங்கையில் முதலீடு செய்வதற்கான பின்னணியை உருவாக்க வேண்டும்.
அதற்கு முன்னர் இலங்கையில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம். முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு துறை மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளோம்.
அத்தோடு, தன்னிறைவு பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் தயாரித்து வருகின்றோம்.
இதற்கு மேலதிகமாக, இலங்கையில் கல்வி, விவசாயம், மீன்பிடி, தொழில்நுட்பத்துறை என பலத்துறைகளில் முதலீடு செய்யும் வகையிலான திட்டங்களை தயாரித்துள்ளோம்.
இலங்கையில் சர்வதேச முதலீடுகள் அதிகரிக்கும் போது வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இதனால், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் இளம் தலைமுறையினருக்கு இந்த நாட்டிலேயே இருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
உதாரணமாக, கல்வித்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும் போது, அதிக பட்டதாரிகளை உருவாக்குவதற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களை வழங்க முடியும்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், படித்தப் பின் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் நாங்களே ஏற்படுத்தியும் கொடுக்க திட்டங்கள் வகுத்துள்ளோம்.
தொழிற்கல்வித் திட்டங்களையும் பயிற்றுவிக்கும் செயற்பாடுகளையும் அறிமுகம் செய்யவுள்ளோம். மேலும் தகவல் தொழில்நுட்பத்தில் ‘ஆஃப் ஷோர்’ நிறுவன வசதிகளையும், நாங்கள் அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக வருமானத்தை ஈட்டும் முதலீட்டு திட்டங்களையும் தயாரித்து வருகின்றோம்.
அத்தோடு, முதலீட்டாளர்களுக்கான திட்டங்களை இனங்காட்டிக் கொடுப்பதுடன், திட்ட அனுமதி, திட்ட வரைவுகளையும் பெற்றுத் தருவதற்கான ஒழுங்குகளை செய்து வருகிறோம்.
எனவே, சர்வதேச நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் மாத்திரமின்றி சர்வதேச முதலீட்டாளர்களையும் இலங்கையில் முதலீடு செய்யுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இந்தச்சந்தர்ப்பத்தில் சர்வதேச முதலீடுகள் இலங்கை பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதற்காக இலங்கையின் அனைத்துத் துறைகளிலும் பாதுகாப்பான, வருவாயை அதிகரிக்கக் கூடிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்தி, மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் கைகொடுக்க வேண்டும். கைகொடுப்பார்கள் என நான் திடமாக நம்புகிறேன்.
மற்றும் இந்தப் பணிகளில் ஊடகத்துறை என்பது மிகப்பெரிய பங்களிப்பை செய்கின்றது. எமது இந்த பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உங்களின் ஆதரவை என்றும் எதிர்பார்க்கின்றேன். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை