தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் – அரச அச்சக திணைக்களம்

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தாமதமாகக் கிடைக்கப் பெற்றால் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பது தாமதமடையலாம் என அரச அச்சக திணைக்கள தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. அச்சிடல் பணிகளுக்கான திறைசேரி 4 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. ஆனால், அச்சிடல் பணிகளுக்காக இதுவரை 15 கோடியே 20 லட்சம் ரூபா செலவாகியுள்ளதுடன், சேவையாளர் மட்ட கொடுப்பனவு 5 கோடியே 20 லட்சம் ரூபா வழங்கப்பட வேண்டும்.

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்குத் தேவையான நிதியை விரைவாக வழங்காவிடின் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால்மூல வாக்குச்சீட்டுக்களை ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பது சிக்கலானதாக அமையும்.

தேவையான நிதியை வழங்கினால் 5 நாளகளுக்குள் தபால்மூல வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியும். – என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடத்தவும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்தவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக அரச அச்சக திணைக்களம் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி வாக்குச்சீட்டுக்கள் அச்சிடல் பணிகளை இடைநிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து நிதி விடுப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அதன்போது உயர் நீதிமன்றம், 2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கும் செயற்பாட்டுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.