இருட்டறையில் கட்டி வைத்து 10 மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்! பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்

கண்டி – பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 10 மாணவர்கள் இருட்டறையில் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மேற்;படி சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி காப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை விடுதிக்குள் 10 மாணவர்களை (ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள்) கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்ட குறித்த குழுவினர் கண்டி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே , மார்ச் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக விடுதிகளில் தங்கியிருந்த 10 மாணவர்கள் மீதே இவ்வாறு கொடூரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுதியில் தங்கியுள்ள ஐந்து மாணவர்கள் அன்றைய தினம் இரவு மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் சென்றுள்ளனர்.

விடுதியில் மேலும் மூன்று மாணவர்கள் வந்துள்ளதுடன் இரவு 11.30 மணியளவில் பெண்கள் விடுதிக்குப் பொறுப்பான ஆசிரியையும் அங்கு வந்துள்ளார்.

அங்கு மாணவர்களைக் கண்ட அவர், உடனடியாகவே அதிபருக்கு அறிவித்துள்ளார். அதேவேளை மாணவர்களின் விடுதிக்கு பொறுப்பான ஆசிரியரும் மேலும் ஓர் ஆசிரியையும் ஐந்து மாணவர்களையும் கீழே தள்ளி கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அதனையடுத்து அவர்கள் அணிந்திருந்த மேற்சட்டைகளை கழற்றி கைகளைக் கட்டி மாணவிகளின் விடுதிக்கு முன்பாக முழங்காலிடச் செய்துள்ளனர்.

மேலும் மாணவிகள் ஐந்து பேரை விடுதிக்கு முன்பாகக் கொண்டுச்சென்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் முடிகளை கட்டி அவர்களையும் முழங்காலிடச் செய்துள்ளனர்.

அதனையடுத்து அவர்களை இருட்டறையொன்றுக்குள் சிறைப்படுத்தியுள்ளனர். அதில் ஒரு மாணவர் கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அந்த மாணவர் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலே மேற்படி தனியார் பாடசாலையின் அதிபர், இரு ஆசிரியைகள், ஆசிரியரொருவரும் மற்றும் விடுதி கண்காணிப்பாளர்கள் இருவரும் கண்டி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.