ஞாயிறு தினங்களில் ஆன்மிக கல்விக்கு இடையூறாக நடத்தப்படும் ஏனைய வகுப்புக்களை நிறுத்துமாறு கோரி போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் ஞாயிறு அறநெறிப் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டமையால், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்வி கற்றலுக்கான நேரங்களில் நடைபெறும் ஏனைய பிரத்தியேக வகுப்புகளை நிறுத்துமாறு கோரி அடையாள கவனவீர்ப்பு போராட்டமொன்று நேற்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

இந்த ஆர்ப்பாட்டமானது இந்து மத பீடத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடந்துள்ளது.

ஞாயிறுதோறும் அறநெறிப் பாடசாலைகளில் ஆன்மிக கல்வி கற்பிக்கப்படும் நேரத்தில் சில பாடசாலைகளிலும், கல்வி நிலையங்களிலும், வீடுகளிலும் பிரத்தியேக வகுப்புக்கள் நடப்பதால் அறநெறிப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு ஏனைய பிரத்தியேகமான கல்வி வகுப்புக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை நிறுத்தி, ஆன்மிக கல்வியை  கற்பதில் மாணவர்கள் ஈடுபட இடமளிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துங்கள்’, ‘இளைய தலைமுறைக்கு ஆன்மிக கல்வி முக்கியம்’, ‘அறநெறிப் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புகள் வேண்டாம்’, ‘ஆன்மிக கல்வியை ஊக்குவிப்போம்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில்,

ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளில் இடம்பெறும் ஆன்மிக கல்வியை மாணவர்கள் தொடர்வதில் இடையூறுகள் காணப்படுகின்றன.

அதேபோல், கத்தோலிக்க சமய மறைக்கல்வி, இஸ்லாமிய சமய அஹதிய்யா கல்வி, பெளத்த சமய தாம் பாடசாலை மாணவர்களும் மற்றைய பிரத்தியேக வகுப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மாணவர்களின் ஆன்மிக கல்வி கற்றல் நலனையும் கருத்திற்கொண்டு பிற வகுப்புக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை நடத்துவதை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு ஆன்மிக கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு மிகவும்  தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம் என கோரியுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு சென்று, வட மாகாண ஆளுநருக்கு கையளிக்கும் வகையில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேலிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.