மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை – நாமல்
பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்தத் தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும்.
கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம், மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியால தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது. Pஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் விசேட பேச்சு மேற்கொண்டோம்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.
மாகாண சபை தேர்தல் பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களால் மாகாண சபை நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது. உள்ளூராட்சிமன்றங்களுக்கும் இந்த நிலை ஏற்படுமாயின் தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் மாறுபட்ட கருத்துக்களைக் குறிப்பிடுவார்கள்.
அரசமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்குத் தயாராக உள்ளோம். ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல் என எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் போட்டியிடுவோம்.
பொருளாதாரப் பாதிப்புக்கு தற்போது ஒப்பீட்டளவில் தீர்வு காணப்பட்டுள்ளது. நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. சுற்றுலாத்துறை முன்னேற்றமடையும் தருணத்தில் சுற்றுலாத்துறை மையங்களில் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும், ஆகவே, எதிர்க்கட்சிகள் பொருளாதார முன்னேற்றத்துக்கான செயற்பாடுகளுக்குத் தடையாக செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை