நீதித்துறையை அச்சுறுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது – விஜித ஹேரத்
உயர்நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு அழைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். நீதித்துறையை அச்சுறுத்தும் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. மாகாண சபைகளைப் போல் உள்ளூராட்சி மன்றங்களும் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் தேர்தலை நடத்தி புதிய மன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
நகர சபைகள் மற்றும் பிரதேச சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இறுதி பகுதியில் இடம்பெற்றிருக்க வேண்டும். விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரால் ஒருவருட காலத்துக்கு பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போட அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.
நிதி நெருக்கடி என்ற தர்க்கத்தை முன்வைத்துக் கொண்டு அரசாங்கம் தேர்தல் செயற்பாடுகளுக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட நிதியை நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுவிக்காமல் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை மதிக்காமல் செயற்படுகிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான குழுவுக்கு அழைக்க ஆளும் தரப்பு அவதானம் செலுத்தியுள்ளது.நீதிபதிகளை விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு கிடையாது. நீதிமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகள் பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாக்க நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை நீதிபதிகள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை