பொருளாதார மீட்சிக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளியோம்! அமைச்சர் காஞ்சன திட்டவட்டம்
ஊழல்மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் தொழிற்சங்கத் தலைவர்களின் நோக்கங்களுக்கு அரச சேவையாளர்கள் பலியாகக் கூடாது,பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்துக்காக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து,அரசியல் முறைமைகளுக்கு அமைய அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
சவால்களைப் பொறுப்பேற்கும் தைரியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எமக்கும் இடையில் அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவர் நாட்டுக்காகக் கடுமையான சவால்களைப் பொறுப்பேற்றார். அரசாங்கம் என்ற ரீதியில் பாரிய நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம்.
அத்தியாவசிய சேவை கட்டமைப்பைத் தடையின்றி விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்களை சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேசம் வரவேற்றுள்ளது.
நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு என சுட்டிக்காட்டியுள்ளன. நாட்டின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் பல சிறந்த நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது அத்தியாவசியமானது, அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தொழிற்சங்கத்தின் காட்டிக் கொடுப்பு செயல் எனக் குறிப்பிடுகிறார்கள்.
தேசிய வளங்களின் உச்ச பயனை பெற்றுக்கொள்ளாமல் தேசிய வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுக் கொண்டு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காமல் இருப்பதால் எவருக்கும் எவ்வித பயனும் கிடையாது.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் ஆட்சியில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் விசேட கவனம் செலுத்தியுள்ளன. இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 எண்ணெய் குதங்கள் ஊடாக இந்திய நிறுவனம் இலாபம் பெறுகின்றன மறுபுறம் எண்ணெய் தாங்கிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
மறுபுறம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி செய்யப்படவுமில்லை, வருமானம் கிடைக்கப் பெறவுமில்லை.
சிறந்த கொள்கைத் திட்டத்துக்கு அமைய திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்களுடன் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் தென்னாசிய வலயத்தில் இலங்கை எரிபொருள் விநியோககத்தில் கேந்திர மையமாக மாற்றமடைந்திருக்கும்.
எரிபொருள் மற்றும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் பெறுபேறு அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் நன்கு அறிவோம். நெருக்கடியான சூழ்நிலையில் தான் எரிபொருள், மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டன.
நாட்டை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கி, அராஜகரமான சூழலில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொழிற்சங்கத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
தொழிற்சங்கத்தினர் 23,24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் போராட்டங்களில் அல்லது பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் இந்த திகதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டால் தமது சம்பளம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவார்கள்.
புதிய வரி கொள்கைக்கு உள்ளாகாத ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஜோசப் ஸ்டாலின் ,ஜாசிங்க ஆகியோர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ஒட்டுமொத்த ஆசிரியர், அதிபர்களை பலியாக்குகிறார்கள். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் போட்டித்தன்மையை ஏற்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டத்துக்கு பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படுவதால் எவரது தொழில் உரிமையும் பாதிக்கப்படாது. மக்களுக்கான சேவை வினைத்திறனான முறையில் முன்னெடுக்கும் மறுசீரமைப்புக்கள் மாத்திரம் மேற்கொள்ளப்படும்.
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது, குறுகிய அரசியல் நோக்கத்துக்காக போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கத் தலைவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயற்படுவதை அரச சேவையாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பணிபுறக்கணிப்பால் அரச வருமானத்தை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளோம் என தொழிற்சங்கத் தலைவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனம், ரெலிகொம் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபமடைகிறது.
ஆகவே, நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டாம் என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.இலாபம் அடைவதற்காக மறுசீரமைக்காமல் இருக்க முடியாது.நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பௌஸர்களுக்கு ஜி.பி.எஸ்.இயந்திரம் பொருத்துவதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
ஒரு லீற்றர் எரிபொருளில் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் பயணம் செய்வதாக சாரதிகள் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள், ஆனால் ஜி.பி.எஸ்.இயந்திரத்தில் ஒரு லீற்றர் எரிபொருளில் 4 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்ய முடியும் எனக் காட்டுகிறது.
இந்த விடயத்தில் பாரிய மோசடி இடம்பெறுகிறது,இதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் போது தொழிற்சங்கத்தினர் தொழில் உரிமை, அரச வளங்களை விற்றலுக்கு எதிர்ப்பு எனக் குறிப்பிட்டுக் கொண்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்,ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை