பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணமளிக்குக! எஸ்.எம்.மரிக்கார் கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடுத்தர மக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்கள், ஆகவே, நிதியுதவி ஒத்துழைப்பைக் கொண்டு அரசியல் செய்வதை விடுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதையிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட நன்றியை தெரிவித்துக் கொள்வது அவசியமற்றது, ஏனெனில் அவர் நிதியமைச்சர், அமைச்சுக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலையடையப் போகிறது, ஆகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் என 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிட்டோம், எமக்கு பெரும்பான்மை உள்ளது,
ஆகவே சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டிய தேவை எமக்கு இல்லை என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிட்டார்கள். தற்போது அவர்களின் மனநிலையை மாற்றி சர்வதேச நாணய நிதித்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதையிட்டு ஜனாதிபதிக்கு விசேட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு மற்றும் இதனால் சமூகக் கட்டமைப்பில் தோற்றம் பெறும் மாற்றங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.
தந்தை சூது விளையாடி குடும்பத்தின் பொருளாதாரத்தை இல்லாதொழித்த போது வீட்டின் உறுதிப்பத்திரத்தை தாய் வங்கியில் அடகு வைத்து கடனுக்கு விண்ணப்பம் செய்கிறார்,
குறித்த கடனை வழங்க வங்கி இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களின் பிள்ளைகள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகிறார்கள், அவ்வாறான நிலையே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து வெடித்த பட்டாசுகளின் பின்னணியில் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாகத்தை காண்பித்து அரசியல் செய்தார், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைக் காண்பித்து அரசியல் செய்கிறார். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்றும் சுதந்திரமாக சுகபோகமாக வாழ்கிறார்கள்,ஆனால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு எரிபொருள்,அத்தியாவசிய பொருள்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டது. மின்சார கட்டணம், வரி அதிகரிக்கப்பட்டது.
தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு புதிய வரி கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் 33 கோடி டொலர் முதல் தவணையை பெற்றுகொள்ள நடுத்தர மக்கள் முழுமையாக தங்களை அர்ப்பணித்துள்ளார்கள், ஆகவே முதல் கட்ட தவணையை கொண்டு நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை