காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்….! வைத்தியர் சந்திரகுமார் எச்சரிக்கை….!

காசநோய் அறிகுறியுடைய பலர் அதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்காமல் பொது வெளியில் உலாவித்திரிகின்றனர் என வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் –

உலககாச நோய்தினம் இன்று நினவு கூரப்பட்டது. சாதாரணமாக ஒரு நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 63 நபர்கள் காசநோயாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அந்த எண்ணிக்கையானோர் இனம்காணப்படவில்லை.

இலங்கையில் வருடத்துக்கு 13 ஆயிரம் காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டிய நிலையில் 8 ஆயிரம் பேரே இனம் காணப்படுகின்றனர். வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 54 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால், இதன் எண்ணிக்கை 100 ஆக இருந்திருக்க வேண்டும். எனவே ஏனைய நோயாளிகள் வெளியில் உலாவித்திரியலாம்.

பிரதானமாக இருமல் மூலமாகவே இந்த நோய் பரவலடைகின்றது. இதனால் விரைவாக அனைவருக்கும் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட இருமல், சளியுடன் இரத்தம் வெளியேறல், உணவில் நாட்டமின்மை, உடல் மெலிதல், மாலைநேர காய்ச்சல் போன்றன இந்த நோய்க்கான அறிகுறியாக உள்ளன.

இப்படியான அறிகுறிகள் இருப்பவர்கள் தாமதிக்காமல் வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள மார்புநோய் சிசிச்சை நிலையத்தில் அதற்கான பரிசோதனைகளை செய்து கொண்டால் நோயை விரைவில் அறிந்துகொள்ள முடியும். இதுவே நாம் பொதுமக்களிடம் கேட்டுகொள்ளும் விடயம்.

இதற்கான மருந்தை ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் இந்த நோயை முற்றாகக் குணப்படுத்தலாம். இல்லாவிடில் இந்த கிருமி சுவாசப்பையினூடாக உடல் முழுவதும் பரவும் தன்மை கொண்டது. எனவே இருமல் அறிகுறி இல்லாதவர்கள் கூட காசநோயாளர்களாக இருக்கலாம்.

அத்துடன் அநேகமாக நோய் எதிர்ப்புசக்தி குறைவானவர்கள், நீரிழிவு நோயாளர்கள், சிறுவர்கள், இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள், போன்றவர்களுக்கு இந்த நோய் இலகுவில் தொற்றிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே நோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். மேற்படி விடயம் தொடர்பாக இன்று வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.