தமிழர்களின் உரிமைகளை பறிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் – சிறிதரன்

தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு பறிக்கலாம் என்பது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. பிற இனங்களையும், அவர்களின் உரிமைகளையும் அழிக்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் முதலில் வெளிவர வேண்டும். அதனை விடுத்து செயற்பட்டால் உலகில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கொண்டு வந்தாலும் இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி ஒத்துழைப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்து, கொண்டாடும் நிலை காணப்படுகிறது.

ஆனால் நாடு 54 பில்லியன் டொலர் கடனாளியாக உள்ளது. நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளோம். பொருளாதாரப் பாதிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் சுதந்திரமாக, நிம்மதியாக வாழும் சூழல் இந்த மண்ணில் உள்ளதா? பல்வேறு கட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்வியல் கட்டமைப்பில் ஓர் அனுகுமுறையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதா? நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இதுவரையில் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் அவதானம் செலுத்தவில்லை. சிறந்த தலைவரை இந்த நாடு தெரிவு செய்யவில்லை.

வரி விதிப்பு ஊடாக நாடு முன்னேற்றமடையும் என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேற்றமடைந்திருக்கும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேன்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி விதிக்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டு மக்களைப் பொருளாதார ரீதியில் அதளபாதாளத்துக்குள் தள்ளி எவ்வாறு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்? யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் கடன் பெற்றது. சொந்த மண்ணில் வாழ்ந்த மக்களைக் கொல்வதற்கு அதிக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இதனால் நாடு கடன் சுமைக்குள் தள்ளி இன்று மீள முடியாத வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் அரச அதிகாரிகள் கூட பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னரும் நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுகிறது.

முன்னாள் போராளிகள் என்ற காரணத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்கள் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

தமிழர்களை எந்த நேரமும் விசாரணைக்கு அழைக்க முடியும் என்ற நிலையே இந்த நாட்டில் காணப்படுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாகப் புதிய பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதுவரை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

இலங்கை ஒரு நீதியான நாடாகக் காணப்படவில்லை. குருந்தூர் மலையில் வலுக்கட்டாயமான முறையில் ஆதிசிவன் ஆலய அம்சங்களை அழித்து விட்டு புத்த விகாரையை பௌத்த பிக்குகள் ஸ்தாபித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டும், பிக்குகள் அதற்கு எதிராக செயற்பட்டு பாரிய விகாரையை அமைத்துள்ளார்கள்.

இந்த நாட்டில் நீதிமன்றங்களை இவர்கள் மதிக்கிறார்களா? நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய அமைச்சர், அதிகாரிகள் செயற்படுகிறார்களா? இந்த நாட்டில் நீதியில்லை.

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுதலை செய்தார். ஆனால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. திருகோணமலை மாணவர்கள் படுகொலைக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை. மறுபுறம் கிருஷாந்தி படுகொலைக்கு நீதி கிடைக்கப்பெறவில்லை. ஆகவே நாட்டில் நீதி எங்குள்ளது?

தமிழர்களின் பூர்வீக நிலங்களை எவ்வாறு அபகரிப்பது என்பது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை என முதலில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

பின்னர் அங்கு பிக்குகளின் வசதிக்காக கோட்டையை மடம் என குறிப்பிட்டு இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. தற்போது அது ஒரு பௌத்த விகாரை என வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடற்படையினர் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

இலங்கையின் பௌத்த தமிர்கள் வாழ்ந்துள்ளார்கள். சீனா, ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பௌத்த மதம் உள்ளது, ஆகவே, இங்கு குறிப்பிடுவதை போன்று அந்த நாடுகளையும் பௌத்த சிங்களம் எனக் குறிப்பிட முடியுமா? தமிழர்கள் ஒரு காலத்தில் பௌத்தர்களாக வாழ்ந்துள்ளார்கள். கி.மு.3 ஆம் நூற்றாண்டு காலத்தில் அதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

தொல்லியல் நிபுணர்கள் என்.கே. திருச்செல்வனின் ஆய்வு அறிக்கையில் இலங்கையில் 2300 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தனர் என பிராமி கல்வெட்டில் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கள தொல்லியன் நிபுணர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் கிடைக்கப் பெறும் போது அதன் பிராமின் வடிவம் தொடர்பில் அவதானம் செலுத்தாமல் அந்த பகுதி சிங்கள குடியேற்றம் என அரசாங்கம் தீர்மானிப்பது அபத்தமானது. தமிழ்கள் தமது பூர்வீக நிலங்களில் இருந்து புறந்தள்ளப்படுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்களின் இருப்பு திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகிறது, தமிழர் பகுதியில் ஓர் இராணுவ படையினர் கனவு கண்டேன் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தர் சிலை வைத்தால் அதனை சிங்கள குடியேற்றமாக எவ்வாறு குறிப்பிட முடியும?.

முறையற்ற வகையில் செயற்படும் போக்கு அரசாங்கத்திடம் உள்ளது. மதம், இனம் ரீதியாக முன்னேற்றம் காணப்பட்டால் மாத்திரமே நாடு முன்னேறும். அதனை விடுத்து பிற இனங்களை அழித்து முறையற்ற வகையில் செயற்பட்டால் உலகில் உள்ள அனைத்து சொத்துக்களைக் கொண்டு வந்தாலும் இந்த நாடு முன்னேறாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.