ஜனாதிபதி விக்ரமசிங்க தேசிய சொத்து அவரைப் பாதுகாப்பது மக்கள் கடமை! வஜிர அபேவர்தன கூறுகிறார்
நாடு வீழ்ச்சியடைந்த போது தனியொரு நபராக சவாலை ஏற்று அதில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்தாவார்.
அவரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமையாகும். அவர் வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றி கடனற்ற நாடாக இலங்கையை மாற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தி தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
ஜனாதிபதியின் பிறந்த தினம் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவமுடைய தினமாக மாறியுள்ளது. இதுவே ஐ.தே.கவிற்கு காணப்படும் பெருமையாகும்.
அவரது பிறந்த தினத்திற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பியுள்ளார்.
குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வெளிநாடு செல்ல முடியும் என்ற நிலைமையை மாற்றியமைத்தது ஐ.தே.கவாகும். இதன் காரணமாக நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்கும் வெளிநாடுகளில் சென்று கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வாறான நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்களை நாடு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
எனினும் நாட்டு மக்கள் அதனைச் செய்யவில்லை. அதன் காரணமாகவே தற்போது துன்பத்தை அனுபவக்கின்றனர். இவரைப் போன்ற தலைவர் எவ்வித பேதமும் இன்றி அனைத்து மக்களாலும் பாதுகாக்கப்பட்டால், நாட்டிலுள்ள இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்குப் பதிலாக வெளிநாட்டவருக்கு இலங்கையில் வேலை வாய்ப்பை வழங்கும் சூழல் உருவாக்கப்படும்.
தனக்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குமாறும் , அந்தக் காலப்பகுதிக்குள் முழுக் கடனையும் மீள செலுத்தி முடிப்பதாகவும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அவர் வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றி கடனற்ற நாடாக இலங்கையை மாற்றுவார்.
எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்து என்ற ரீதியில் நாமனைவரும் பெருமிதம் கொள்கின்றோம். நாடு வீழ்ச்சியடையும் போது தனித்து சவாலை ஏற்று வெற்றி பெற அவரால் முடிந்துள்ளது.
224 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றி தனி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டை ஒப்படையுங்கள் என்று பலமுறை நாம் கூறியமை இதன் காரணமாகவே.
அவரது பிறந்த தினத்தில் அனைவரும் எரிபொருள் , எரிவாயு , மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை எந்தவொரு தட்டுப்பாடுமின்றி பெற்று அன்றாட செயற்பாடுகளை அசௌகரியங்கள் இன்றி முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே இனியாவது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை