அமெ. நலனோம்பு அமைப்புகளுக்கு மஹிந்த சமரசிங்க நன்றி பாராட்டு! 

இலங்கைக்கு அவசியமான மருந்துப்பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை நன்கொடையாக வழங்கிவரும் அமெரிக்காவின் 3 முக்கிய நலனோம்பு அமைப்புகளுக்கு அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள பல்வேறு மனிதாபிமான நன்கொடை வழங்கல் அமைப்புக்களுடன் முன்னெடுத்த கலந்துரையாடல்களின் மூலமே இலவச மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய இந்த உதவி இலங்கைக்குக் கிடைத்திருப்பதாக வோஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 8 கொள்கலன்கள் ஏற்கனவே சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், அவை சுமார் 27 மில்லியன் அமெரிக்க டொலர் (10 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியுடையவை என்றும் இலங்கைத்தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் உரியகாலப்பகுதியில் இலங்கைக்கு அவசியமான மருத்துவ உதவிகள் உள்ளிட்ட நன்கொடைகளை வழங்கிய ‘ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்’, ‘ஹோப் வேல்ட்வைட்’ மற்றும் ‘அமெரிக்கெயார்ஸ்’ ஆகிய மூன்று அமைப்புக்களுக்கும் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் அமைப்பு 23 மில்லியன் டொலருக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய 4 உதவிப்பொருள் கொள்கலன்களையும், அமெரிக்கெயார்ஸ் அமைப்பு 853,000 டொலர் பெறுமதியுடைய 3 உதவிப்பொருள் கொள்கலன்களையும், ஹோப் வேல்ட்வைட் அமைப்பு 2.7 மில்லியன் டொலர் பெறுமதிவாய்ந்த உதவிப்பொருள் கொள்கலன்களையும் இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.