நாடு கட்டியெழுப்பப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்! ஹரின் பெர்னாண்டோ கூறுகிறார்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நிறைவு செய்து , நாடு சற்று கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைக் கூட நடத்த முடியும்.
எனவே இன்னமும் தாமதமாகவில்லை, எதிர்தரப்பினரை எம்முடன் இணையுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.
அத்தோடு எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் எனத் தெரிவித்த அவர், சவாலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ள போதிலும் , மக்களுக்கு பரந்தளவில் சலுகைகளை வழங்குவது சிரமமானதாகும்.
எவ்வாறிருப்பினும் எம்மால் விரைவில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கப் பெற்றுள்ளமைக்கு இந்தியா மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் எதிர்க்கட்சியிலுள்ளவர்களைத் தவிர வெளிநாட்டவர்கள் உட்பட ஏனைய தரப்பினருக்கு பொறுப்புணர்வு காணப்படுகிறது.
நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை அவர்கள் விரும்பவில்லை. இந்நாட்டில் கடன் பெறாத எவரேனும் உள்ளனரா? அவ்வாறிருக்கையில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் எனக் கூறுவது அடிப்படையற்றது.
இன்னும் தாமதமாகவில்லை. எனவே அரசாங்கத்துடன் இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். நஷ்டத்தில் இயங்கும் எந்தவொரு நிறுவனத்தையும் பொறுப்பேற்பதற்கு எவரும் முன்வருவதில்லை.
அத்தோடு அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. அரசாங்கத்தின் பொறுப்பு மக்களுக்கான சேவைகளை வழங்குவதாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக நாட்டை மாற்ற முடியாதல்லவா? சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நிறைவு செய்து, நாடு சற்று கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்தலாம். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மாத்திரமல்ல, ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலையோ நடத்தி எவரும் நாட்டை ஆட்சி செய்யலாம்.
அரசியலை முன்னிலைப்படுத்தியமையின் காரணமாக இதுவரை காலமும் நாம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தோம். அநுரகுமார திஸாநாயக்கவோ , சஜித் பிரேமதாஸவோ சவாலை ஏற்கவில்லை.
எனவே சவாலை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள். இதனை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை