சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற விசேட அதிகாரங்களுடன் கூடிய ‘அமுலாக்கப்பிரிவு’ – இந்திரஜித் குமாரசுவாமி

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தின்கீழ் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கென அயர்லாந்தில் ஸ்தாபிக்கப்பட்டதை ஒத்த, விசேட அதிகாரங்களுடன்கூடிய ‘அமுலாக்கப்பிரிவை’ நிறுவுவதற்கு இலங்கை நாட்டம் காண்பித்திருப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைத் தொடர்ந்து இலங்கையின் அடுத்த கட்டம் என்ன?’ என்ற தலைப்பில் இலங்கை மத்திய வங்கியால் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்நிலை முறைமையில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாட்டின் மீதான நம்பிக்கை சீர்குலைவதன் மூலம் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் இரத்துச்செய்யப்படுவதையும், பொருளாதார மீட்சி செயன்முறை பின்னடைவைச் சந்திப்பதையும் தடுக்கும் நோக்கிலேயே இந்த அமுலாக்கப்பிரிவை ஸ்தாபிப்பதற்கு இலங்கை திட்டமிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை மீறிச்செயற்படும்போது, அந்தச் செயற்திட்டம் இரத்துச்செய்யப்படக்கூடும்.

அது தற்போது குறித்த உதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதைத்தொடர்ந்து வலுவடைய ஆரம்பித்துள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கு வழிவகுக்கும்.

எனவே ஓர் அமுலாக்கப்பிரிவை ஸ்தாபிப்பதில் ஜனாதிபதி பெரிதும் நாட்டம் கொண்டிருக்கின்றார். – என்று கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று அந்தக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதுடன், அது உரியவாறு இயங்குவதை உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், எந்தவொரு நாட்டின் அரசாங்கத்துடனும் பேச்சு நடத்தி, அவசியமான விடயங்களைப் பூர்த்திசெய்யக்கூடிய அதிகாரமுடைய ஒருவர் அதனை நிர்வகிக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு மிகக்குறுகிய காலத்தில் சர்வதேச நாணய நிதியசெயற்திட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான இந்த ‘அமுலாக்கப்பிரிவின்’ வகிபாகமே அயர்லாந்து கடந்த 2008 ஆம் ஆண்டு நிதியியல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.

அதுவே சர்வதேச நாணய நிதியச்செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய நாடுகளின் பட்டியலில் அயர்லாந்தை இணைத்தது. இந்த அமுலாக்க செயன்முறையை முன்னெடுத்துச்செல்வதில் அயர்லாந்து மிகக்கவனமாக இருந்தது.

அதேவேளை இச்செயன்முறை அமுலாக்கத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கட்டமைப்புக்கள் பொறுப்பாக இருந்ததால், சில பணிகள் பரவலாக்கப்பட்டிருந்தன. – என்று முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கைக்கும் அதனையொத்த ஒரு கட்டமைப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அவர், இந்த நெருக்கடியிலிருந்து நாம் நிலையாக மீட்சிபெறவேண்டுமானால், பொருளாதார அபிவிருத்திச்செயற்திட்டத்தை வலுப்படுத்தக்கூடிய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டும்.

கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டங்கள் உறுதிப்பாடு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஆகிய இரு கூறுகளையும் உள்ளடக்கியிருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.