இலாபமடைகின்ற அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதன் பின்னணி என்ன? சரித ஹேரத் கேள்வி

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன் பின்னணி என்ன? அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வழிமுறை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தன்னிச்சையான முறையில் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தினால் பாரிய விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது. நாடு வழமைக்கு திரும்பி விட்டது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு குறிப்பிட்டால் நாடு வங்குரோத்து, தேர்தல் இல்லை என்று குறிப்பிட்டால் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் நாடு வங்குரோத்து நிலையில் இல்லை, ஆளும் தரப்பே வங்குரோத்து நிலையில் உள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நாள்களில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு இலங்கை இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளது,

ஆனால் நாடு முன்னேற்றமடையவில்லை. நல்லாட்சி அரசாங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான இரு அரசாங்கங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை ஆளும் தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம், ஆகவே இனி பிரச்சினையில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றமை அடிப்படையற்றது, நாடு என்ற ரீதியில் இனி தான் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆகவே கட்டாயம் கடன் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் நட்டமடையும் அரச நிறுவனங்களை விடுத்து இலாபமடையும் அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தை அரசாங்கத்தால் தொடர்ந்து நிர்வகிக்க முடியாது என கோப் குழுவின் தலைவராக மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளேன். பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை ஆகியவற்றை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் அவதானத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை மாத்திரம் எடுக்க முடியாது, ஏனெனில் இந்த ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் மக்களாணை கிடையாது, ஆகவே மறுசீரமைக்கும் நிறுவனங்கள் தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றம் எடுக்க வேண்டும். லிற்ரோ நிறுவனம், காப்புறுதி நிறுவனம், ரெலிகொம் நிறுவனம் ஆகியவற்றின் அரச பங்குகளை தனியார் மயப்படுத்துவதன் பின்னணி என்ன? ஜனாதிபதி,அமைச்சரவை மாத்திரம் நாடு அல்ல. ஆகவே கடன் மறுசீரமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். மக்களின் அபிலாஷைகளை கோர அரசாங்கம் தயார் இல்லை. ஆகவே, நாடாளுமன்றத்தின் ஊடாக உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.