வைத்தியர்கள் இன்மையால் அநுராதபுரம், முல்லைத்தீவு வைத்தியசாலைகளின் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டன

அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளின் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் பணியாற்றிய விசேட வைத்திய நிபுணர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளமையின் காரணமாக இவற்றை மூட வேண்டியேற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை காரணமாக மாதாந்தம் சுமார் 50 வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்காக விண்ணப்பிக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

துரதிஷ்டவசமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பேராசிரியர் பிரிவு மூடப்பட்டுள்ளது. குறித்த பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளமையின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என்று நாம் எதிர்வு கூறியிருந்தோம்.

அதிகாரிகளிடமும் , மக்களிடமும் நாம் இது தொடர்பில் தெரிவித்திருந்தோம். எனினும் எவருமே அவதானம் செலுத்தாமையின் பிரதிபலனே இதுவாகும். 4 விசேட வைத்திய நிபுணர்கள் மாத்திரம் இருந்த வைத்தியசாலையில் , அவர்கள் நால்வருமே வெளிநாடு செல்லும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்?

இந்த பிரச்சினைகளுக்கான மாற்று வழி தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விரிவானதொரு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளோம். அநுராதபுரம் மாத்திரமின்றி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் சிறுவர் பிரிவு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு விசேட வைத்திய நிபுணர்கள் பணியாற்றிய இடத்தில் தற்போது ஒருவர் மாத்திரமே உள்ளார். 24 மணித்தியாலங்களும் ஒருவரால் மாத்திரம் பணியாற்ற முடியாது.

கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 700 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக மாதாந்தம் 40 – 50 விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர்கள் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கும் நிலைமையே காணப்படுகிறது. இதே நிலைமை தொடரும் பட்சத்தில் நோயாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.