தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் – சுசில்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சில் ஈடுபடுவோம்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு புதிய சட்டத்தின் ஊடாக நியாயம் பெற்றுக்கொடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என சபை முதல்வர்,அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மூன்றாவது வாரத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வின் போது சபைக்கு நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்படும். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு சபை கூடவுள்ளது.
அன்றைய தினம் 1979 ஆம் ஆண்டு 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும்,1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளன.
ஏப்ரல் மாதத்துக்கான மூன்றாவது வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இந்தக் காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.ஜனநாயகம்,மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரான எவ்வித விடயங்களும் குறித்த சட்டமூல வரைவில் உள்ளடக்கவில்லை.அவ்வாறு ஏதும் காணப்படுமாயின் நாட்டு மக்கள் எவரும் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் தொடர்பில் தமிழ் தலைமைகளுடன் விரிவான பேச்சில் ஈடுபடுவோம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புதிய சட்டத்தின் ஊடாக நியாயம் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் இம்மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் அத்துடன் உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியான பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்படும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை