யாழ். பல்கலையில் போதிய வரவின்மையால் பரீட்சைக்கு அனுமதியில்லை : ஆராய கூடுகிறது விஞ்ஞான பீடச் சபை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரை, வரவு ஒழுங்கின்மை காரணமாக பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்து குறைந்த வரவு வீதமுள்ள மாணவர்களையும் பரீட்சைக்கு அனுமதிப்பது தொடர்பில் ஆராய்வதற்கென விசேட பீடச் சபைக் கூட்டத்தை இன்று பி.ப. 4 மணிக்கு கூட்டுவதற்கு விஞ்ஞான பீடாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கூட்டங்களில் பங்கேற்பதை விரிவுரையாளர்கள் பகிஷ்கரித்து வருகின்ற போதிலும் மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நடத்தப்படும் பீடச்சபைக் கூட்டத்தை நடத்துவதற்கும், அந்தக் கூட்டத்தில் விரிவுரையாளர்கள் கலந்துகொள்வதற்கும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.

விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான நியமங்களின் படி விரிவுரைகளுக்கு 80 சதவீத வரவு இல்லாத மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிப்பதில்லை. விசேட மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக வரவின்மையை உறுதிப்படுத்தி பீடச் சபையிடம் மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பீடச்சபையின் பரிந்துரையுடன், மூதவையால் விசேட அனுமதி வழங்கப்படுவது வழமையாகும்.

இருப்பினும், தற்போதைய பொருளாதார இடர்களின் மத்தியில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டண உயர்வு காரணமாக வரவுத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யாத ஒரு சில மாணவர்கள் பீடாதிபதியிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதனைக் கருத்திற் கொள்ளாமல், பாரபட்சமான முறையில் வேறு மாணவர்களைப் பரீட்சை எழுத அனுமதித்துள்ளதுடன், தங்களை அனுமதிக்காமை அடிப்படை மனித உரிமை மீறலாகுமெனக் கூறி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து இது தொடர்பில் உடனடியாக விளக்கமளிக்குமாறு விஞ்ஞான பீடாதிபதியை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த விஞ்ஞான பீடாதிபதி வரவின்மை தொடர்பில் பீடச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் மூதவை மட்டுமே தீர்மானிக்கமுடியும் என்றும், உடனடியாக பீடச்சபையைக் கூட்டி முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.