எதிர்க்கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தவே அரசாங்கம் முன்னுரிமையளிக்கிறது – திஸ்ஸ அத்தநாயக்க

சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்றுள்ளமையால் எமது வெளிநாட்டு கடன் 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இது பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டிய விடயமல்ல. இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்பதை விடுத்து அரசாங்கம் கட்சிகளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அரசாங்கம் அதன் தோல்வியை மறைப்பதற்காகவே எம்மில் பலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் எனக் கூறுகின்றனர். அவ்வாறு ஒருபோதும் இடம்பெறப் போவதில்லை.

அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால் அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைய மாட்டோம். அரசாங்கத்திலுள்ள பலர் வெகு விரைவில் எம்முடன் இணைவர்.

ஒருபுறம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் மறுபுறம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களின் குரலை முடக்குவதற்கு முற்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள் என எவற்றையுமே நடத்துவதற்கு இடமளிக்காத வகையிலேயே இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் சந்தேகநபரொருவரை தடுத்து வைக்க வேண்டுமெனில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் அவ்வாறு எந்த ஏற்பாடுகளும் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்றுள்ளமையால் எமது வெளிநாட்டு கடன் 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இது பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டிய விடயமல்ல. கடந்த 3 மாதங்களுக்குள் சுமார் 2 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் மாத்திரம் 700 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறு நாட்டு பிரஜைகள் வெளியேறுவதை முதலில் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து கட்சிகளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.