மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்து நிவாரணங்களை வழங்க திட்டம் இருந்தால் எமது ஆதரவு – வடிவேல் சுரேஷ்
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு முறையான சட்டத்தை ஏற்படுத்த வேண்டும். மலையக மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி நல்ல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்குமாக இருந்தால் எமது பூரண ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
பண்டாரவளை பூனாகலை – கபரகல மண்சரிவு ஏற்பட்டு ஒரு மாதமாகிறது. கபரகல மற்றும் மக்கள் தெனியவில் 142 குடும்பங்கள் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 70 குடும்பங்கள் மாகந்தர தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வித வசதிகளும் இல்லாத அந்த தொழிற்சாலை உடைந்து விழும் நிலையில் இருக்கின்றது. சிறிய குழந்தைகளும் அந்த முகாமில் இருக்கின்றன.
இந்த மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கை என்ன? எப்போது அவர்களுக்கு வீடுகள் வழங்கப் போகிறது என்று கேட்கின்றேன்.
இதேவேளை, சூறாவளியால் பசறை, மடுல்சீமை பகுதியில் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது அரிசி நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனைப் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று எட்டியாந்தோட்டை நாகசேனை தோட்டத்தில் சுதந்திரமாக வாழவிடுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர்களின் சமூக பாதுகாப்பை அவர்கள் கோருகின்றனர்.
யாருக்காவது முடியுமாக இருந்தால் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். வெளியார் வந்து அங்கு காணிகளை அபகரிக்க முடியாது.
அத்துடன் மலையக மக்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாக பேசி வருகின்றேன். கூட்டு ஒப்பந்தம் ஊடாகவோ, சம்பள நிர்ணய சபையின் ஊடாகவோ சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.
தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கு முகம்கொடுக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து 3250 ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியையும் வலியுறுத்தியுள்ளேன்.
அத்துடன் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்போம் என்று கூறினால் போதாது. அது தொடர்பில் சட்டத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே, அரசாங்கம் நல்ல திட்டங்களைச் செயற்படுத்தி, பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்து மலையக மக்களை உள்வாங்கி அவர்களுக்கும் நிவாரணங்களை வழங்கினால், மலையக மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை