தொழிற்சங்க கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி வாய்ப்பளிக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த ஏப்ரல் மாதம் நாடு எவ்வாறான நிலையை எதிர்கொண்டது என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.லிட்ரோ நிறுவனம் அதிக வருமானம் பெற்ற நிறுவனமாக இருந்தது. அந்த நிறுவனம் தனக்கு பொருத்தமில்லாத வேலைகளை செய்யப்போய் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. எரிவாயு கலவையில் மாற்றம் ஏற்படுத்த போய் லிட்ரோ நிறுவனம் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டது.
இதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க பிரச்சினையில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டவர்களில் அதிகமானவர்கள் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இவர்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். சில கட்சிகளை சேர்ந்த தலைமைத்துவம் வழங்கியவர்கள் அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான ரீதியில் பார்த்து அவர்கள் பணிக்கு செல்ல அனுமதி வழங்குமாறு கோருகின்றோம்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விடயத்தில் பிரச்சினைகள் உள்ளன. அண்மையில் முட்டை இறக்குமதி செய்யப்பட்டது. வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவுக்காக முட்டை வழங்குவதற்கு முடியாதுள்ள நிலையில் அவற்றை கேக் உற்பத்திக்காக பேக்கரிக்கு விநியோகிக்கின்றனர். இதனை மாற்றி முட்டை வழங்கப்பட வேண்டியவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை