கசப்பான மருந்தை பருக வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர்

நாடு பொருளாதார பாதிப்பு என்ற கொடிய நோயை எதிர்கொண்டுள்ளது. நோய் குணமடைய வேண்டுமாயின், கசப்பான மருந்தை நிச்சயம் பருக வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, செயற்றிட்டங்கள் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில் –

தவறான பொருளாதார முகாமைத்துவத்தால் நாடு மிக மோசமான பொருளாதார பாதிப்பு என்ற கொடிய நோயை எதிர்கொண்டுள்ளது. நோயைக் குணப்படுத்த காலம் கடந்த பின்னரே சர்வதேச நாணய நிதியம் என்ற வைத்தியரை நாடியுள்ளோம்.

நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடுமையாகக் காணப்பட்டாலும், நோயை குணப்படுத்த கசப்பான மருந்தை பருக வேண்டும்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள அரசாங்கம் கடந்த 7 மாத காலமாக எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவடைந்துள்ளது.

கடந்த காலங்களைக் காட்டிலும், சர்வதேச நாணய நிதிய விவகாரம் தற்போது வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படுகிறது.

10 பிரதான நிபந்தனைகளை செயற்படுத்துவது தொடர்பாகத் துறைசார் நிபுணர்கள், பட்டய கல்வி துறைசார் நிபுணர்கள், நிதி துறையியலாளர்களுடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்காக முன்னெடுக்கப்படும் சகல பேச்சுகளையும் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்.

நாட்டு மக்கள் சிறந்த முறையில் சிந்திக்கிறார்கள். ஆனால், அரசியல்வாதிகள் பாரம்பரியமான அரசியல் கோணத்தில் இருந்துகொண்டு கருத்துரைக்கிறார்கள். -என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.