கோட்டாவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது தவறு – பவித்ரா
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்து அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம்.
ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தீர்மானம் எடுத்தோம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியராட்சி தெரிவித்தார்.
கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள்? 75 வருடகால அரசியல் கட்டமைப்பு மோசமானது என எதிர்தரப்பினர் அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய காலத்திற்குள் ராஜபக்ஷர்கள் நாட்டை அபிவிருத்தி செய்தார்கள்.
ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பெரும்பாலான மக்கள் மறக்கவில்லை. அபிவிருத்தி செயற்திட்டத்தின் பயனை அனுபவிக்கிறார்கள்.
எதிர்வரும் காலங்களில் ராஜபக்ஷர்கள் தலைமையிலான சிறந்த அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதை உறுதியாகக் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தெரிவின் போது கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததன் தவறை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவின் போது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து திருத்திக் கொண்டோம்.
இடைக்கால ஜனாதிபதி தெரிவின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களாக ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகபெரும ஆகியோர் களமிறங்கினார்கள். பொருளாதார நெருக்கடி, ஜனநாயகம் ஆகிய அடிப்படை காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்தோம்.
ஜனநாயகத்தை ஸ்தீரப்படுத்துவதற்காகவே அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தீர்மானம் எடுத்தோம். எமது தீர்மானம் சரியானது என்பதை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை