ஜனநாயக போராட்டம் கூட பயங்கரவாதமாக சித்திரிக்கப்படும் – அஜித் மானப்பெரும
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக சிவில் தரப்பினருடன் விரிவான பேச்சில் ஈடுபடுவோம். வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூட பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர் மேலும் பேசுகையில் –
நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் காணப்படுகின்ற பின்னணியில் பாரதூரமான ஏற்பாடுகளை உள்ளடக்கிய வகையில், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுகின்றமை அடிப்படையற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தும்போது சமூகக் கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும். மக்கள் போராட்டம், எதிர்ப்பு ஆகியவற்றில் இருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
சட்டமூல வரைவில் ஜனநாயகத்துக்கு எதிராக உள்வாங்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பல தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் தீர்மானத்தை நீதியமைச்சர் தாமதப்படுத்தியுள்ளார்.
இந்த சட்டமூலம் தொடர்பில் சிவில் தரப்பினருடன் விரிவான பேச்சில் ஈடுபடுவோம்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூட பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள். எனவே, ஜனநாயகத்தைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நிச்சயம் நாடுவோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை