தேசிய அரசாங்கம் : கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை – காமினி லொக்குகே

தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுகளும் இடம்பெறவில்லை. எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் ஏனெனில் நாங்களே ஜனாதிபதியைத் தெரிவு செய்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற பேசின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம். குறுகிய காலத்துக்குள் நாடு வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.

நெருக்கடியான நேரத்தில் சவால்களை பொறுப்பேற்காத தரப்பினர் தற்போது அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் எனக் குறிப்பிடுகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் ஸ்திரமான தன்மையில் காணப்பட வேண்டும். சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு தெளிவுபடுத்துவார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்த போது எவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையவில்லை.

நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் தற்போது அரசாங்கத்துடன் இணைய எதிர்தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுகளும் இடம்பெறவில்லை. எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.