நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாட்டுக்கு சாதகமானதாக மாற்றப்பட வேண்டும் – சஜித்

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு என்ற போர்வையில் தேசிய சொத்துக்களை தனியார் துறையினருக்கு தாரை வார்க்கும் சூது விளையாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது.

எனவே, நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமானதாக மாற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

நாட்டில் உள்ள சகல பிரச்சினைகளுக்குமான ஒரே தீர்வு சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் என்று காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

நாணய நிதியத்துக்கு ஆரம்பத்திலேயே செல்ல வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். எனினும், அப்போதைய அரசாங்கம் அதனை காலம் கடத்தி இன்று நாட்டுக்கு சாதகமற்ற இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.

வங்குரோத்தடைந்த நாடொன்றுக்கு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நிர்வகிக்க முடியாது. எனவே, அவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால், இந்த அரசாங்கம் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது.

மாறாக, நஷ்டமடையும் நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாகவும், இலாபம் பெறும் நிறுவனங்களை மேலும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாகவும் மாற்றுவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்காமல், தேசிய சொத்துக்களை விற்பதை தேசிய குற்றமாகவே நாம் பார்க்கின்றோம்.

எனவே, நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தினை நாட்டுக்கும், மக்களுக்கும் பொருத்தமான வகையில் மாற்றியமைக்க வேண்டும். இது நாட்டையும், மக்களையும் நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகும்.

இதனை விடுத்து, நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் ஊடாக மக்கள் மீது மென்மேலும் வரிச் சுமைகளை சுமத்துவது பொறுத்தமற்றது. எனவே, கடன் பெற்றதை பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல.

பண்டோரா ஆவணங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏன் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை?

இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்தால் நாடு இழந்துள்ள பல மில்லியன் டொலர்களை மீளப் பெற முடியுமல்லவா? மக்கள் மீது சுமத்தப்படும் வரிச் சுமைகளை ஓரளவுக்கேனும் குறைக்க முடியுமல்லவா?

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பது அனைவர் மத்தியிலும் காணப்படும் பிரதான பிரச்சினையாகும்.

எவ்வாறிருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இவ்வனைத்துக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கின்றேன். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு என்ற போர்வையில் தேசிய சொத்துக்களை தாரை வார்க்கும் சூதுக்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.