பதவி எப்போது பறிபோகும் என்ற அச்சத்தில் பிரதமர் தினேஷ் : எதிர்க்கட்சி தலைவராகும் கற்பனையில் நாமல் – மரிக்கார்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் முயற்சியில் அவரது விசுவாசிகள் ஈடுபட்டுள்ளமையால் பதவி எப்போது பறிபோகும் என்ற அச்சத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன காணப்படுகிறார்.

மறுபுறம் நாமல் ராஜபக்ஷ கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் தானே எதிர்க்கட்சி தலைவர் என்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த வாரம் கிரக மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றங்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாகவும் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளனவாம்.

எனவே ஜோதிடம் மீது கொண்டுள்ள 50 சதவீத நம்பிக்கையிலும் , அரசியல் மீது கொண்டுள்ள 50 சதவீத நம்பிக்கையிலும் மஹிந்த ராஜபக்ஷ சிறு விளையாட்டொன்றை ஆரம்பித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் எப்போதும் இணைந்திருக்கும் சிலர் அவருக்கு பிரதமர் பதவியை வழங்கி கௌரவமான ஓய்வினை வழங்குமாறு கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இதை எண்ணி பதவி எப்போது பறிபோகும் என்ற அச்சத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன காணப்படுகின்றார். இந்த முரண்பாடான நிலைமை நீழும் போது பொதுஜன பெரமுன பிளவடைந்து, அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும்.

இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்யும் கட்சியான பொதுஜன பெரமுன தற்போது மிகப் பொறுத்தமான தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன் புதிய நியமனங்கள் பொறுத்தமானவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் , தம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் தாம் பயந்து ஓடவில்லை என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

அவரது தந்தை மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தலைமறைவாகியிருந்ததை மறந்து நாமல் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறு மக்கள் சந்திப்புக்களுக்கு செல்லும் போது அங்குள்ள சிறு கூட்டத்தைக் கண்டதும் தான் அடுத்த எதிர்க்கட்சி தலைவர் என்ற கற்பனை நாமல் ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.