அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பந்துல!

அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாணய நிதியத்தின் ஆரம்ப நிபந்தனைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமானது சர்வதேச கடன்களுக்கான வட்டியை செலுத்தக் கூடிய திட்டமிடலை சமர்ப்பிப்பதாகும்.

இதன் மூலம் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு வரி சலுகை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும்.

எனினும் ஒப்பந்தத்தின் படி செயற்பட்டால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியுள்ளோம்.

இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. சர்வதேச மட்டத்தில் பொருளாதார ரீதியில் நம்பிக்கையை உருவாக்குவதற்கு ஒப்பந்தத்திற்கமைய செயற்பட வேண்டும்.

எனவே துன்பங்களை சகித்துக் கொண்டேனும் இவற்றுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.