ஆலோசனைக்கமையவே பேர்ள் கப்பல் வழக்கு சிங்கப்பூரில் தொடரப்பட்டது – பந்துல

சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான வழக்கினை சிங்கப்பூரில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கை கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய சிரேஷ்ட சட்டத்துறை நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. தொழிநுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனமொன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , அமைச்சரவை அனுமதியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் இது குறித்து கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.