தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசினால் புலி முத்திரை குத்துவீர்களாயின் அதுவே எனக்கு பெருமை – சாணக்கியன்
தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு அது பெருமை எனப் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் எனக்கு உரையாற்றுவதற்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை. அதனை நான் மீண்டும் மீண்டும் கேட்டபோது அமைச்சர் மனுச நாணயக்கார என்னைப் புலி எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சபையில் அநேகமான உறுப்பினர்களுக்கு அவர்களது கேள்விகளை கேட்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. எனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை.
நான் கிழக்கு மாகாணத்தை நான் பிரதிநித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் எனது கட்சி சார்பாக அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றவன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வு ரீதியான பிரச்சினையொன்று அண்மைக்காலமாக காணப்படுகின்றது.
சுமார் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் போக்குவரத்து பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
மாகாணசபைகள் தற்போது இயங்குவதில்லை. இவ்விடயம் தொடர்பாக மாகாண ஆளுநரும் அது தொடர்பில் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார். அவர் ஒரு இனவாதியைப் போலவே செயற்பட்டு வருகின்றார்.
சிங்கள மக்களின் காவலர் என்ற இனவாத போக்கிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செயற்பட்டு வருகின்றார்.
போக்குவரத்து பிரச்சினையை அந்த மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று இந்த சபையில் போக்குவரத்து அமைச்சரிடம் அது தொடர்பிலான கேள்வியை முன்வைத்தேன்.
நான் முன்வைத்த பிரச்சினை என்பது உணர்வு ரீதியான பிரச்சினை இல்லை என்று பிரதிசபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டால் அது உணர்வு ரீதியிலான பிரச்சினையாக இருக்கும்.
நான் எனது மக்களின் பிரச்சினையை சபைக்கு எடுத்துக்கூறும் எனது ஒலிவாங்கியை நிறுத்துகின்றனர்.
ஒரு அமைச்சரவை அமைச்சர் என்னை புலி என்று அழைக்கின்றார். என்னை இனவாதி என்று அழைக்கின்றார்கள்.
வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இந்த சபையில் மறுசீரமைப்பில் சம்பியன் என்று அவர்கள்; தங்களைப் புகழாரம் சூட்டிக்கொள்கின்றார்கள்.
அண்மையில் தென்னாபிரிவுக்கு இன்பச் சுற்றுலாவை மேற்கொண்டு நல்லிணக்கம் தொடர்பிலான கற்றலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
நல்லிணக்கம் தொடர்பில் கற்றுவந்த அமைச்சர் அலி சப்ரி, நான் எனது மக்கள் குறித்து கூறும் போது அதனை அலட்சியப்படுத்துகின்றார்.
எனது மக்களின் பிரச்சினையை இந்த பாராளுமன்றத்தில் கூறுவதால் எனக்கு புலி என்று பெயர் வைப்பார்களேயாயின் அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
என்னை புலி என்று நீங்கள் கூறுங்கள். ஆட்சேபனை இல்லை.
தமிழ் மக்களது பிரச்சினையை பேசும் போது அதற்கு நீங்கள் புலி என்று முத்திரை குத்துவீர்களேயாயின் அதுவே இந்த நாட்டினுடைய சாபக்கேடு என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை