எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றவருக்கும் அரசாங்கத்துக்குமிடையில் தொடர்புள்ளதாக நாம் சந்தேகிக்கின்றோம் – ஐக்கிய மக்கள் சக்தி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நபருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம்.

எனவே பாராளுமன்றத்திலுள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இவ்விவகாரத்தில் உண்மைகளை வெளிப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அத்தோடு பொலிஸ் திணைக்களம் அதன் சுயாதீனத் தன்மையை இழந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் , அரசியல் தலையீடுகளுக்கமையவே தற்போது 7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சாமர குணசேகர யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். குறித்த நபர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படுவதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பில் பெரிதாகப் பேசிக் கொண்டிருப்பவர்களின் அரசாங்கத்திலேயே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு நீர் மற்றும் மின் கட்டணங்களை அதிகரிப்பது தீர்வாகாது. ஊழல் , மோசடியாளர்களை இனங்கண்டு அவர்களால் கொள்ளையிடப்பட்டு தேசிய சொத்துக்களை பறிமுதல் செய்தால் நாட்டின் பெருமளவான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்.

சாமர குணசேகர என்ற நபருக்கு அரசாங்கத்துடன் ஏதேனும் தொடர்புகள் காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அரசாங்கத்துடன் தொடர்பற்ற ஒருவரால் இவ்வாறு செயற்பட்டிருக்க முடியாது. எனவே இது தொடர்பில் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோருகின்றோம்.

இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத்திலுள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க தீர்மானித்துள்ளோம். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் இதற்கு பொலிஸ் திணைக்களத்திடம் அனுமதி பெறப்படவில்லை. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை நீக்கப்பட்டு அரசியல் தலையீடுகள் வலுப்பெற்றுள்ளன. நீதிமன்ற உத்தரவுகளைக் கூட பொலிஸார் நடைமுறைப்படுத்தாத நிலைமையே தற்போது காணப்படுகிறது. சட்டம் மாற்றமடையும் போது அமைதியும் சீர்குலையும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.