சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் இரத்து செய்யப்படலாம் – நாலக கொடஹேவா

தேசிய கடன்களை மறுசீரமைத்தால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இரத்து செய்ய நேரிடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.

நாணய நிதியத்தின் ஒரு சில சாதக காரணிகளை மாத்திரம் பெருமையாக குறிப்பிடும் தரப்பினர் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் குறிப்பிடாமல் இருப்பது பிரதான குறைப்பாடாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தவறான பொருளாதார கொள்கையினால் 2019 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது. இதனை ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால் தங்களின் அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதிக்கு சாதகமாக செயற்படுகிறார்கள்.2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சர்வதேச பிணைமுறியில் இருந்து அதிக கடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.

கடன் மறுசீரமைப்புக்கு பிரதான நிலை கடன் வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்,14 சதவீத கடன்களை இரத்து செய்ய இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

கடன் மறுசீரமைப்புக்கு இதுவரை உறுதியான இணக்கப்பாடு எட்டப்படவில்லை. சர்வதேச கடன்களை மறுசீரமைக்க வேண்டுமாயின் தேசிய கடன்களையும் மறுசீரமைக்க வேண்டும் என பிரதான நிலை கடன் வழங்குநர்கள் அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின் இரண்டாவது தவணை நிதியை பெற்றுக்கொள்ள தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். இதனால் சாதாரண வைப்பாளர்கள்,முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.ஊழியர் சேமலாப நிதியம்,ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவை கூட இரத்து செய்யப்படும்.ஆகவே நாட்டு மக்களுக்கு உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.