பேர்ள் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த தெரிவுக்குழுவை ஸ்தாபிக்குக! நீதியமைச்சர் விஜயதாஸ வலியுறுத்து

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்ட ஈடு பெற்றுக்கொள்ள வழக்கு தாக்கல் செய்வதை தடுக்க பலம் வாய்ந்த தரப்பினர் தொடர்ந்து பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு உண்மையைப் பகிரங்கப்படுத்த வேண்டும். நியூ டைமன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபியுங்கள் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இதன்போது அமைச்சர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டைமன் கப்பல் மற்றும் கடலில் மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் உண்மையை குறிப்பிடுவேன். எவருக்கும் அச்சமடையப் போவதில்லை. எந்த விடயத்தையும் நான் தவறாகக் குறிப்பிடவில்லை. இரண்டு கப்பல்கள் தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயத்தை தவறாக புரிந்துகொண்டதற்கு என்னால் பொறுப்பேற்க முடியாது.

எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் 2021ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீ விபத்துக்கு உள்ளானது. அதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமளவில் கிழக்கு கடற்பரப்பில் நியூ டைமன் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது. இந்த கப்பலாலும் கடல் வளங்கள் மாசடைந்தது.

நியூ டைமன் கப்பல் தீ விபத்தால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்ட ஈட்டினை பெற்றுக்கொள்வதற்கு வழக்கு தாக்கல் செய்வதில் தாமதம் காணப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரியும், நானும் வழக்குத் தாக்கல் விவகாரத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனைகளை வழங்கினோம். காலம் கடந்த பின்னணியில் தான் நட்ட ஈடு பெற்றுக்கொள்வதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

2021ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் தாமதம் காணப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை உட்பட உரிய தரப்பினருக்கு கப்பல் விபத்து, வழக்குத் தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை அறிக்கையாக செப்ரெம்பர் (கடந்த) மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டேன்.

40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழுவினர் ‘மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை’யை கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதியில் என்னிடம் சமர்ப்பித்தார்கள்.

அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக வழக்குத் தாக்கல் தொடர்பான விடயங்கள் மற்றும் தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை அந்த தடைகளில் ஒன்று என குறிப்பிட வேண்டும். இதனால் சட்டமா அதிபர் திணைக்களம் நெருக்கடிக்குள்ளானது.

இவ்வாறான பின்னணியில் தான் நியூ டைமன் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கை கிடைக்கப் பெற்றது. முழுமையான மதிப்பீடு இல்லாமல் ஏன் கப்பலை வெளியேற்றினீர்கள் என கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவரிடம் வினவியபோது ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய, விடுவித்ததாக அவர் தெரிவித்தார். அதற்கான மின்னஞ்சல் செய்தியையும் அவர் காண்பித்தார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயநாத் கொலம்பகே நியூ டைமன் கப்பலை வெளியேற்றுமாறு கடற்படை தளபதி மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை ஆகியோருக்கு மின்னஞ்சல் செய்தியினூடாக அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நான் வினவியபோது அவர் ‘ஜனாதிபதி கடற்படை தளபதிக்கு உத்தரவு ஒன்றை வழங்க வேண்டுமாயின், அதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக பிறப்பிக்க வேண்டும் அல்லது ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.

நியூ டைமன் கப்பல் விபத்தின்போது நீங்கள் தான் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் (நாலக கொடஹேவாவை நோக்கி); கப்பலால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக மதிப்பிடாமல் கப்பலை வெளியேற்றாமல் நீங்கள் தடுத்திருக்க வேண்டும். முழுமையான மதிப்பீடு இல்லாமல் கப்பலை வெளியேற்ற வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியதை தொடர்ந்து அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ‘நியூ டைமன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக மதிப்பீடு செய்யாமல், கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்ற வேண்டாம்’ என உரிய தரப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் கப்பலை விடுவித்ததால் வழக்கு தாக்கல் செய்வது தாமதப்படுத்தப்பட்டது. இறுதியில் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கப்பல் வெளியேறியுள்ளதால் வழக்கு தாக்கல் மற்றும் விசாரணைகள் தொடர்பில் அழைப்பு விடுக்க முடியாத நிலை உள்ளது.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நட்ட ஈடு பெற்றுக்கொள்வதற்கு வழக்கு தாக்கல் செய்வதை தடுக்க பலம் வாய்ந்த தரப்பினர் பாரிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

நியூ டைமன் கப்பல் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, நாடாளுமன்றம் ஊடாக தெரிவுக்குழுவை நியமித்து நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.