இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாமலாக்கப்படவேண்டும்!  ரிஷாத் வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் கையேந்தி நிற்காமல் இருக்கும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக இனவாத மதவாதம் தலைதூக்குவதை இல்லாமலாக்க வேண்டும்.

மேலும் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் அமைச்சுக்களில்  திருட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மோசடிகளை நிறுத்தாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற   சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின்   கீழான ஏற்பாட்டை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

நாடு பொருளாதார ரீதியில் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாட்டை மீட்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை வெளிக்கொண்டுவர உதவியமைக்காக சர்வதேச நாணய நிதியத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான எமது ஆலாசேனைகளையும் நாங்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறோம்.

மேலும் இந்தியா பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தபோது 1991ஆம் ஆண்டு முதல்தடவையாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டு, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வரைபை அன்று நிதி அமைச்சராக இருந்த மன்மோஹன் சிங் முன்வைத்து செயற்படுத்தினார். அதன் காரணமாக இந்தியா இன்று அபிவிருத்தி அடைந்த நாடாக மாறி இருக்கிறது.

அதேபோல் நாங்கள் 16 தடவைகள் நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போது, நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் 17 தடவையாகவும் நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளோம்.

அதனால் மீண்டும் நாணய நிதியத்திடம் கையேந்தி நிட்காமல் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக வரைவு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

அத்துடன் நாட்டை மீள கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மாத்திரம் போதாது. உற்பத்திகளை அதிகரித்து ஏற்றுமதிகளை அதிகரிக்கவேண்டும். சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும். என்றாலும் அதற்கான முதலீட்டாளர்கள் வந்தாலும் தேவையான சூழல் நாட்டில் இல்லை.

அதனை ஏற்படுத்த வேண்டும். அதேநேரம் மோசடிகளை நிறுத்தவேண்டும். ஆனால் நாடு இன்று பாரிய நெருக்கடியில் உள்ள நிலையிலும் சில அமைச்சர்கள் அமைச்சுக்களில் மேற்கொண்டு வரும் திருட்டு நடவடிக்கைகளை ஜனாதிபதி கண்டும் காணாமல் இருக்கிறார். இவ்வாறான மோசடிகளை நிறுத்தாமல் நாட்டை முன்னேற்ற முடியாது.

மேலும் வடக்கையும் தெற்கையும் இணைக்கின்ற மன்னார், புத்தளம் பாதை யுத்தத்துக்கு பின்னர் திறக்கப்பட்டு, கோடடாபய ராஜபக்ஷ வந்த பின்னர் மீண்டும் பாதையை மூடினார்கள். இந்த பாதையூடாக யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வரும்போது 100 கிலோமீற்றர் குறைவாகும்.

இதனால் உட்பத்தி பொருள்களை இந்த பாதையூடாக சந்தைப்படுத்த வரும் போது பாரியளவில் செலவுகளைக் குறைக்க முடியும். இதனை ஜனாதிபதியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுத்தபோதும் வீதி அதிகாரசபை இநத விடயத்தில் முரண்டு பிடித்ததுபோல் செயற்பட்டு வருகிறது.

அதேபோன்று சில மதகுருமார் புல்மோட்டை போன்ற பகுதிகளில், அங்கு அவர்கள் ஒரு குடும்பம்தான் இருக்கிறது. ஆனால், ஆயுதங்களுடன் சென்று தமிழ், முஸ்லிம் மக்களின் ஆயிரக்கணக்கான காணிகளை அபகரித்து வருகின்றனர். இவ்வாறு செயற்படுகின்றபோது, அது ஊடகங்களில் அனைத்து தொழிகளிலும் வெளிவருகிற்னபோது, சர்வதேச நாடுகள் எமது நாடு தொடர்பில் பிழையான கருத்தையே கொள்வார்கள்.

நாடு இந்தளவு பாரிய நெருக்கடியில் இருக்கின்றபோதும்  இனவாத, மதவாத சிந்தனை இன்னும் ஒழியவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற செய்தி வெளிநாடுகளுக்கு செல்கின்றபோது நாட்டின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புக்கள் ஏற்படப்போவதில்லை.

எனவே, இந்த நாடு முன்னேற வேண்டுமாக இருந்தால் நாட்டில் இனவாதம், மதவாதம் ஒழிக்கப்படவேண்டும். அனைத்து இன மக்களும் இந்த நாட்டுக்கு சொந்தக்காரர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும். அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் அவ்வாறே நிறைவேற்றிக்கொண்டால் நாடு இன்னுமொரு பாரிய அழிவுக்கே செல்வதற்கு வழிவகுக்கும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.