வட, கிழக்கில் மீண்டுமொரு மோதல் உருவாகும் சாத்தியம் – ஐ.நாவின் பிரதிநிதிகளிடம் காரணத்தை கூறினார் சுமந்திரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐ.நா அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் எட்வேர்ட் ரீஸ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தின் விசேட பிரதிநிதி சனா ரஸ்ஸலா ஆகியோருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதை இலக்காகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல் தடுப்புச் செயற்திட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான செயற்திட்டங்கள் முன்னர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன? இனிவருங்காலங்களில் அவற்றை எவ்வாறு முன்னெடுக்கலாம்? என்பது குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது இலங்கையில் உருவாகக்கூடிய சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கும் இருவிதமான மோதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த எம்.ஏ.சுமந்திரன், அவற்றை உரியவாறு கையாள்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

முதலாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம்வாய்ந்த பகுதிகள் அழிக்கப்படல் என்பன பற்றி ஐ.நா அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இவை தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுவதாகத் தெரிவித்தார். எனவே இதுகுறித்து ஐ.நா அதிகாரிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும், மேற்குறிப்பிட்டவாறான முறையற்ற செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்தவேண்டும் என்றும் சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இரண்டாவதாக நாடளாவிய ரீதியில் உருவாகக்கூடிய சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கும் மோதல் குறித்துப் பிரஸ்தாபித்த அவர், ‘அரகலய’ உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் இன்னமும் அடையப்படாமை இதற்குக் காரணமாக அமையக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அதனூடாகப் பல்வேறு நன்மைகள் அடையப்பட்டுள்ள நிலையில், மக்கள் எதிர்பார்க்கும் உண்மையான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அவசியமான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்கவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.