அநுராதபுரம் – காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவை இரு மாதங்களில் ஆரம்பம் – போக்குவரத்து அமைச்சர்
அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவை இன்னும் இரு மாதங்களுக்குள் ஆரம்பமாகும். வடக்கு மாகாணத்துக்கான புகையிரத சேவை இவ்வருடத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை திருத்தப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அநுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையின் திருத்த பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.பாதையை நவீனப்படுத்தியதன் பின்னர் புகையிரத சேவையை துரிதமாக முன்னெடுக்க முடியும்.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான இந்த செயற்திட்டத்துக்கு இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 3,500 கோடி ரூபா ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் இந்த அபிவிருத்தி செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.
திருத்த பணிகளில் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரை புகையிரத சேவை ஆரம்பமாகும்.
அதனை தொடர்ந்து அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையை குறுகிய காலத்துக்குள் புனரமைத்து இவ்வருட காலத்துக்குள் காங்கேசன்துறை முதல் கொழும்பு வரையிலான புகையிரத சேவையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்துக்களேதுமில்லை